மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து கடந்த மூன்று மாதங்களில் 3 முறை அம்மாநில அதிகாரிகளிடம் புகார் அளித்தும், அவர்களிடமிருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை என்று தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா தெரிவித்தார்.
இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் குகி பழங்குடியினத்தை சேர்ந்த இரண்டு பெண்களை மைதேயி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் கும்பல் ஒன்றுசேர்ந்து நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்துச் சென்றது தொடர்பாக ஜூன் 12-ம் தேதியே தேசிய மகளிர் ஆணையத்துக்கு புகார் வந்தது என்று சில ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து பதில் அளிக்கும் விதமாக ரேகா சர்மா இவ்வாறு தெரிவித்தார். மணிப்பூரில் மே 4-ம் தேதி நடந்த அந்தச் சம்பவம் குறித்த வீடியோ ஜூலை 19-ம் தேதி வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மணிப்பூர் சம்பவம் குறித்து தங்களுக்கு எந்தப் புகாரும் வரவில்லை என்று மறுத்துள்ள மகளிர் ஆணையத் தலைவர், அது குறித்த வீடியோ வெளியாகி சர்ச்சையானதைத் தொடர்ந்து தாமாக முன்வந்து வழக்குப் பதிந்து, அது தொடர்பாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டிருப்பதாகவும், மணிப்பூர் பெண்கள் பிரச்சினை தொடர்பாக வேறு சில புகார்கள் தனக்கு வந்தது. அதுகுறித்து மூன்று முறை மணிப்பூர் அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் பதில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரேகா சர்மா கூறுகையில், “நாங்கள் உண்மைத் தன்மையை சரிபார்க்க வேண்டி இருந்தது, புகார்கள் மணிப்பூரில் இருந்து வரவில்லை. சில புகார்கள் இந்தியாவுக்கு வெளியே இருந்து வந்தன. இருந்தாலும் நாங்கள் அங்குள்ள அதிகாரிகளிடம் புகார் அளித்தோம், அவர்களிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. என்றாலும், நேற்று முன்தினம் மணிப்பூர் வன்கொடுமை (ஆடையின்றி ஊர்வலமாக அழைத்துச் சென்றது) தொடர்பாக வீடியோ வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில், தாமாக முன்வந்து வழக்கு பதிந்துள்ளோம்” என்றார். மேலும், அதிகாரிகளுக்கு தான் எழுதிய கடிதங்களையும் அவர் வெளியிட்டார். அந்தக் கடிதங்கள் மே 18, 19 மற்றும் ஜூன் 19-ம் தேதிகளில் எழுதப்பட்டிருந்தன.