மணிப்பூரில் 2 பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு 2 ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
மணிப்பூர் கொடூரம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள திருமாவளவன் கூறியுள்ளதாவது:-
மதத்தின் பெயரால் அரங்கேறியுள்ள மணிப்பூர் பேரவலம் இந்திய தேசத்திற்குப் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. சங்கிகள் குணமாகவே முடியாத மனநோயாளிகள் என்பதற்கு மணிப்பூர் பாலியல் பயங்கரம் ஒரு சான்று. இவர்கள் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சனாதனிகளின் உற்பத்தியே ஆகும். ஏன் பாஜகவைத் தனிமைப்படுத்தி வீழ்த்த வேண்டும் என்பதற்கு பற்றி எரியும் மணிப்பூரே சாட்சியமளிக்கிறது. பழங்குடி சமூகப் பெண்மணிகளை அம்மணப்படுத்தி பொதுவெளியில் நடத்தி இழிவுப்படுத்தியதோடு கூட்டு வல்லுறவு செய்த அந்தக் கொடிய மனித விலங்குகளைச் சிறைப்படுத்த வேண்டும். விரைந்து விசாரித்துத் தண்டிக்க வேண்டும். இந்தியாவை உலக அரங்கில் தலைகுனிய வைத்துள்ள இந்தக் கொடிய அநாகரிகத்துக்குப் பொறுப்பேற்ற பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும். உடனடியாக மணிப்பூர் அரசைக் கலைத்து அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங்கையும் கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் இதற்கு பதிலளித்து உள்ள பாஜக நாராயணன், “பொறுப்பற்ற, முதிர்ச்சியற்ற, வன்மத்துடன் கூடிய அறிக்கை. இந்தியா ஒரு தேசமே அல்ல என்று நேற்று வரை கூறிக்கொண்டிருந்த திருமாவளவன் திடீரென்று தேசியவாதி ஆனது ஏன்? நடந்தது கொடூரம் என்பதில் யாருக்கும் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும் மாற்று கருத்துகள் இல்லை. ஆளும் கட்சி தான் இதற்கு காரணமாக இருக்க முடியும் என்று கூறுவீர்களேயானால், வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மனித மலத்தை கலந்தது தமிழக ஆளும் கட்சியா? ஒட்டு மொத்த மனித குலத்துக்கே இழிவு இல்லையா? அந்த கொடிய அநாகரீகத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும் என கோராதது என்? தமிழக அரசை கலைத்து மாநில முதல்வரை கைது செய்ய வேண்டும் என கோராதது ஏன்? வன்மம் கொண்டு பேசுவதை திருமாவளவன் நிறுத்தி கொள்ள வேண்டும்” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.