எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு அடிமை என்று ஸ்டாலின் சொல்கிறார். நாங்கள் எந்தக் கட்சிக்கும் அடிமை இல்லை. கொள்ளை அடித்த பணத்தை காப்பாற்றுவதற்காக நீங்கள் அடிமையாக இருக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்து பேசினார்.
அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அக்கட்சி பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க கர்நாடகா சென்றார். எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஸ்டாலின் என்ன பேசினார் என்று நமக்கு தெரியாது. காவிரியில் ஜூன் மாதம் நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை கர்நாடகா திறந்து விடவில்லை. ஜூலை மாதமும் கிடைக்க வேண்டிய நீரையும் திறந்து விடவில்லை. அதையெல்லாம் ஸ்டாலின் கேட்கவில்லை. மக்களை பற்றி சிந்திக்கிற முதல்வராக இருந்தால் என்ன செய்து இருக்க வேண்டும்.. பெங்களூரு சென்றவுடன் அங்கே இருக்கும் முதல்வர் மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சரை சந்தித்து எங்களுக்கு இரண்டு மாதமாக உச்ச நீதிமன்ற அளித்த தீர்ப்புப்படி காவிரி நீரை திறந்து விட வேண்டும் என்று மு.க ஸ்டாலின் பேசியிருந்தால் உண்மையிலேயே அக்கறை கொண்ட முதல்வர் என்று ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இதையெல்லாம் விட்டுவிட்டார்.. மத்திய நீர்ப்பாசனத்துறைக்கு கடிதம் எழுதுகிறார். தண்ணீர் திறந்து விடுவது கர்நாடாக நீர்ப்பாசனத்துறை அமைச்சர்.. அங்கே (பெங்களூர்) நேரடியாக சென்றார். கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அவரிடம் பேசி ஸ்டாலின் நமக்கு கிடைக்க வேண்டிய நீரை பெற்று தந்தாரா என்பது மக்கள் கேட்கும் கேள்வி.. ஆனால் அதையெல்லாம் கேட்கவில்லை. அதை விட்டுவிட்டு மத்திய நீர்பாசனத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதுகிறார். எப்படி நாடகமாடுகிறார்கள் என்பதை மக்கள் பார்க்க வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு அடிமை என்று ஸ்டாலின் சொல்கிறார். நாங்கள் எந்தக் கட்சிக்கும் அடிமை இல்லை. உங்களை போல கொள்ளை அடித்த பணத்தை காப்பாற்றுவதற்காக நீங்கள் அடிமையாக இருக்கலாம். ஆனால், அதிமுக எந்த கட்சிக்கும் அடிமை இல்லை. திமுக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் மக்களுக்காக குரல் கொடுக்கவில்லை. கொள்ளையடித்த பணத்தை காப்பாற்றும் சூழலுக்கு திமுக தள்ளப்பட்டுள்ளது. ஸ்டாலின் திறந்து விட்ட தண்ணீரை நம்பி டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு நடவு செய்து விட்டார்கள். மேட்டூர் அணையில் 15, 20 நாட்களுக்கு தான் தண்ணீர் இருக்கும். 20 நாட்களில் தண்ணீர் தீர்ந்து விட்டால் பயிர் எல்லாம் கருகி விடும். இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகிவிடுவார்கள். அதுமட்டும் இல்லாமல் 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக காவிரி நதி நீர் உள்ளது. இதையெல்லாம் சிந்திக்காமல் அதிகாரம் மட்டும் தான் வேண்டும் என்ற நினைக்கும் முதல்வராக மு.க ஸ்டாலின் இருக்கிறார் என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தகுந்த பாடத்தை புகட்ட வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.