மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்த தொடர் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர். 86 பேரின் கதை என்னவானது என்று தெரியவில்லை. மண்ணுக்குள் புதையுண்டவர்களை தேடும் பணி மூன்றாவது நாளாக நீடித்து வருகிறது.
தென்மேற்கு பருவமழை வட மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளது. கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக மும்பை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பியுள்ளன. அதேபோல குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. ராய்காட் மற்றும் பால்கர்ம மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்திருந்த நிலையில் விடாமல் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மும்பையில் இருந்து 80 கிமீ தொலைவில் உள்ள ராய்காட் மாவட்டம் காலாபூர் தாலுகாவுக்கு உட்பட்ட மலைச் சரிவில் அமைந்துள்ள இர்சல்வாடி கிராமம் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் கடந்த புதன்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். முதலில் 4 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் தற்போது வரை 26 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் 9 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாவார்கள். மறுபுறம் இன்னும் 86 பேரை காணவில்லை. எனவே காணாமல் போனவர்களை கடந்த மூன்று நாட்களாக பேரிடர் மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.
இடையிடையே மழை குறுக்கிடுவதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. அதேபோல மலையடிவாரத்திலிருந்து இந்த கிராமத்தை அடைய 90 நிமிடங்கள் வரை ஆகும் என்பதாலும் மீட்பு பணியில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. மட்டுமல்லாது இக்கிராமத்திற்கு செல்ல போதுமான சாலை வசதிகள் கிடையாது. எனவே மீட்பு பணிக்காக இயந்திரங்கள் கொண்டு வருவதிலும் தொய்வு ஏற்பட்டிருக்கிறது.
இந்த கிராமத்தில் மொத்தம் 48 வீடுகள் இருக்கின்றன. இதில் 17 வீடுகள் முற்றிலுமாக தற்போது மண்ணில் புதைந்துள்ளன. இந்த விபத்தில் ஆறுதல் அளிக்கக்கூடிய செய்தி என்னவெனில், நிலச்சரிவு ஏற்பட்ட புதன்கிழமையன்று கிராமத்தினர் பலர் திருமணத்தில் பங்கேற்பதற்காக வெளியூர் சென்றிருந்தனர். எனவே இடிபாடுகளில் சிக்கியவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. இந்த சம்பவத்தையடுத்து மகாராஷ்டிரா முழுவதும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள கிராமங்களிலிருந்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அதிகாரிகள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.