மேற்கு வங்காளத்தில் மம்தா கட்சியினரால் பாஜக பெண் நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்டதாக புகார்!

மணிப்பூரை போல் மேற்கு வங்காளத்தில் பாஜக பெண் வேட்பாளரை நிர்வாணமாக்கி மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இழுத்து சென்ற சம்பவம் நடந்துள்ளதாக பாஜக பெண் எம்பி கதறி அழுத சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

மணிப்பூரில் குக்கி பழங்குடியினர் மற்றும் மைத்தேயி பிரிவு மக்கள் இடையே கடந்த மே மாதம் 3ம் தேதி முதல் மோதல் இருந்து வருகிறது. இந்த மோதல் பல இடங்களில் வன்முறையாக மாறியது. வீடுகள், கடைகள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதில் 150க்கும் அதிகமானவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வன்முறையின்போது கடந்த மே மாதம் 4ம் தேதி பைனோம் கிராமத்தில் 2 குக்கி பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியானது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மணிப்பூர் கலவரம் குறித்து எதுவும் பேசாத பிரதமர் மோடியே இந்த சம்பவத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தான் தற்போது மேற்கு வங்காளத்தில் பாஜக வேட்பாளர் ஒருவர் நிர்வாணப்படுத்தப்பட்டு இழுத்து செல்லப்பட்டதாக பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது சமீபத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இந்த தேர்தல் சமயத்தில் தான் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டம் தக்சின் பஞ்ச்லா பகுதியில் கடந்த 8 ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அப்போது பாஜக பெண் வேட்பாளர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரால் துன்புறுத்தப்பட்டுள்ளார். அதாவது மணிப்பூரை போல் பாஜக பெண் வேட்பாளர் நிர்வாணமாக்கி ஊர்வலம் அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், போலீசில் புகார் செய்தார். அதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஹிமந்தா ராய் சிலருடன் சேர்ந்து வாக்குச்சாவடியில் என்னை தாக்கினர். மார்பு மற்றும் தலையில் கட்டையால் தாக்கி வெளியே தள்ளினர். இந்த வேளையில் ஹிமந்தா ராய் கூறியதன் பேரில் அலி ஷேக், சுக்மல் பஞ்சா ஆகியோர் சேலை, உள்ளாடைகளை கிழித்து நிர்வாணமாக்கி மற்றவர்களின் முன்னிலையில் பாலியல் தொல்லை கொடுத்தனர் என தெரிவித்து இருந்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி செய்திகள் பெரியளவில் வராத நிலையில் தற்போது மணிப்பூர் சம்பவம் சர்ச்சையை கிளப்பி உள்ளதால் மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த சம்பவம் குறித்து பாஜகவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மேற்கு வங்க மாநில பாஜக எம்பி லாக்கெட் சட்டர்ஜி பகீர் தகவலை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

மணிப்பூர் மகள்கள் இந்த நாட்டின் மகள்கள். அதேபோல் மேற்கு வங்க மாநிலத்தின் மகள்களும் இந்த நாட்டை சேர்ந்தவர்கள். மேற்கு வங்க மாநிலமும் இந்த நாட்டின் ஒரு பகுதியாக தான் இருக்கிறது. பிரதமர் மோடி அனைத்து மாநிலங்களிலும் இருக்கும் கடும் சட்டங்கள் பற்றி பேசுகிறார். மேற்கு வங்க மாநிலத்தின் பெண்கள் பற்றியும் யாராவது பேச வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்” என அழுதார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜூம்தாரும் பக்கத்தில் இருந்தார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛மணிப்பூர் சம்பவம் மிகவும் கொடுமையானது. இது வருத்தத்துக்குரியது. அதேவேளையில் பாஜக தொண்டர் ஒருவர் நிர்வாணமாக மேற்கு வங்காளத்தில் இழுத்து செல்லப்பட்டார். மணிப்பூர் சம்பவத்தை விட இது மோசமானது. மேலும் மணிப்பூர் சம்பவத்துக்கும், மேற்கு வங்க மாநிலத்தின் சம்பவத்துக்கு வித்தியாசம் ஒன்று உள்ளது. மணிப்பூர் மாநில சம்பவத்துக்கு வீடியோ இருக்கிறது. ஆனால் மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த சம்பவத்துக்கு வீடியோ எதுவும் இல்லை. இதற்கு காரணம் முதல்வர் மம்தா பானர்ஜியின் போலீசார் வீடியோ பதிவு செய்ய அனுமதிக்கமாட்டார்கள்” என குற்றம்சாட்டினார்.

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டம் பஞ்ச்லா கிராமத்தில் அண்மையில் பஞ்சாயத்துத் தேர்தல் நடைபெற்றது. அப்போது பாஜக சார்பில் போட்டியிட்ட பெண் வேட்பாளர், வாக்குச்சாவடிக்கு வந்தார். அவரை திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஹிமந்தா ராய் உள்ளிட்டோர் தாக்கியுள்ளனர். மேலும் அந்த பெண்ணின் ஆடைகளை அகற்றி கிராமம் முழுவதும் ஊர்வலமாக இழுத்துச் சென்று மானபங்கம் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக அந்த பெண், போலீஸில் கொடுத்த புகாரின் பேரில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர்கள் ஹிமந்தா ராய் உள்ளிட்ட 40 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.