தக்காளி, வெங்காயம் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு குறித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், விளை பொருட்களை உற்பத்தி செய்வதற்கான வேளாண்மையில் அரசிடம் எந்த திட்டமும் இல்லை என்று சாடினார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இதுவே உங்களுக்கு உயர்வா இருக்கிறது என்றால் இன்னும் 5 வருஷம் கழிச்சி 200 ரூபாய்க்கு விற்கும் வெங்காயம்.. 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்கும். விளை பொருட்களை உற்பத்தி செய்வதற்கான வேளாண்மையில் அரசிடம் எந்த திட்டமும் இல்லை. தமிழ்நாட்டில் இவ்வளவு நில வளம் இருக்கு.. உழைக்கும் ஆற்றல் இருக்கு.. அதை விட்டுவிட்டு வெங்காயம் தக்காளியை வேற மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்கிறோம். அது ஒரு கேவலம். உலகத்திற்கு வேளாண்மை எப்படி செய்வது என்று கற்றுக்கொடுத்த ஒரு இனம் பக்கத்தில் போய் கடன் வாங்கி கொண்டு இருக்கிறது. வெங்காயத்தை பருப்பையும் இந்தியா வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்கிறது. இங்க ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பருவ நிலை உள்ளது.
வெயிலா கொட்டும்.. மழையா கொட்டும்.. பனியா கொட்டும். ஆனால் நமக்கு அப்படி இல்லை. எல்லாம் கலந்து இருக்கும் ஒரு நிலப்பரப்பு.. எல்லா வளமும் இருக்கிறது. கடல் வளம் நில வளம் எல்லாம் இருக்கிறது. ஆனால் இதில் உழைப்பதற்கு ஆற்றல் உள்ள இளைஞர்கள் இருக்கிறார்கள். அதை நோக்கி நகரவே இல்லையே.. அடிப்படை தேவை உணவு.. அத்தியாவசிய தேவை உயிர் தேவை.. அதற்கு நாட்டில் என்ன திட்டம் என்ன இருக்கிறது என்று சொல்லுங்கள்..
அப்புறம் நாட்டில் விலை வாசி உயர்ந்து விட்டது என்றால்.. ஏறும்… திடீர்னு ஒன்றும் ஏறவில்லை. எல்லாமே ஒன்றை ஒன்று சார்ந்து உள்ளது. விலையேற்றம் சுங்கச் சாவடி கட்டணம் , ஒரு இடத்தில் இருந்து ஒரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கான லாரி கட்டணம் என எல்லாமும் அத்தியாவசிய பொருளில் ஏறுகிறது. இந்த செலவுகள் எல்லாம் சேர்ந்துதான் வெங்காயத்தில் ஏறுகிறது. ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கிறது. அத்தியாவசிய பொருட்கள், உணவு பொருட்கள் மக்களுக்கு எளிதாக கொண்டு வருகிற மாதிரி ஒரு திட்டம் கொண்டு வர வேண்டும். நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது.. என்ன திட்டம் இருக்கிறது. வேளாண்மையை விட்டு வேளாண் குடி மக்கள் வெளியேறிவிட்டார்கள்.
100 நாள் வேலை திட்டம் கொண்டு வந்து விவசாயத்தை வேளாண்மை செய்வதற்கு ஆளே இல்லாமல் முடித்துவிட்டார்கள். பிறகு விலைவாசி ஏறத்தான் செய்யும். நாம் தமிழர் ஆட்சி வந்தால் குறையும். ஏன்னு சொல்லுங்க.. நானே வேளாண்மை செய்வேன்.. அரசே வேளாண்மை செய்யும். நிர்ணயிக்கப்பட்ட ஒரே விலையில் நாடு முழுவதும் நாங்களே விநியோகம் செய்வோம். இவ்வாறு சீமான் கூறினார்.