2 கோடியே 15 லட்சம் குடும்ப அட்டைதாரர்களில், தகுதியிருந்தும் உரிமைத் தொகைப் பெற முடியாத குடும்பத் தலைவிகளின் கோபம், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர் கூறியதாவது:-
குடும்ப அட்டை வைத்திருப்போர் அனைவருக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் என்று முதல்வர் வாக்குறுதி அளித்திருந்தார். 2 கோடியே 15 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையை ஏன் வழங்கவில்லை என்பதுதான் எங்களுடைய கேள்வியே. அதேபோல், இந்த தொகையைப் பெற விண்ணப்பிக்க டோக்கன் வழங்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. அந்த டோக்கனை விநியோகிப்பவர்கள் யார் என்று பார்த்தால், தன்னார்வலர்கள். அந்த தன்னார்வலர்கள் யாருடைய பேச்சைக் கேட்பார்கள். திமுக மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர்கள், சென்னையாக இருந்தால் வட்ட செயலாளர்கள் பேச்சைத்தான் கேட்பார்கள்.
அதேபோல், இந்த தொகையைப் பெறுவதற்கு தகுதி என்று பார்த்தால், ஆயிரம் ரூபாயை பெறுவதற்கு 1008 கண்டிஷன். முழுக்க முழுக்க இந்த ஆயிரம் ரூபாய் என்பது, அவர்கள் நிர்ணயிக்கின்ற தகுதியுடைய குடும்பங்கள் என்றால், திமுக உறுப்பினர் அட்டை வைத்திருப்பவர்களும், மாவட்டச் செயலாளர்கள் அடையாளம் காட்டும் நபர்களுக்கும்தான் இந்த உரிமைத் தொகை கொடுக்கப்படும். 2 கோடியே 15 லட்சம் குடும்ப அட்டைதாரர்களில், தகுதியிருந்தும் உரிமைத் தொகைப் பெற முடியாத குடும்பத் தலைவிகளின் கோபம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.