நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் நபர்களை மட்டுமே நான் எதிரியாக நினைக்கிறேன் என்று ஆளுநர் ஆர்.என். ரவி பேசினார்.
தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே சில காலமாகவே மோதல் தொடர்ந்து வருகிறது. தமிழக அரசின் செயல்பாடுகளை ஆளுநர் விமர்சிக்கும் நிலையில், ஆளுநரை அரசு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். கடந்த சில காலமாக இரு தரப்பும் விமர்சிப்பது சற்றே குறைந்துள்ளது. இதற்கிடையே இன்று ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆளுநர் ரவி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் இன்று காலை தொழில் முனைவோர்கள் கலந்து கொள்ளும் எண்ணித் துணிக திட்டத்தின் சார்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என். ரவி அங்குக் கூடியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
இங்கே உலகில் இருக்கும் அனைவருக்கும் இரண்டே இரண்டு ஆசைகள் தான். ஒன்று நம்மைப் பற்றிப் புகழ வேண்டும் என அனைவரும் நினைப்பார்கள். மற்றொன்று அதிகப் பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்பது. பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு.. நமது நாட்டில் அதிகப் பணத்தை வைத்திருந்தாலே அவர்கள் தவறான செயல்கள் செய்தே பணத்தைச் சம்பாதித்து இருப்பார்கள் என்ற தவறான பார்வை உறுவானது. இங்கே அனைவருக்கும் பணம் தான் முக்கியம்.. அதேநேரம் அதிக சொத்து சேர்க்க வேண்டும் என்ற பேராசை இருக்கக் கூடாது. அந்த பேராசை இல்லாமல் ஒருவர் தனது வருமானத்தை அதிகரிக்க முயன்றால் அதில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை. இத்தனை காலம் நாம் எங்கே பிரச்சினை உருவாகிறது என்பதைக் கண்டறியாமலே பிரச்சினைகள் உருவான பிறகு அதைச் சரி செய்ய மட்டும் நடவடிக்கை எடுத்தோம். இதன் காரணமாகவே நாம் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிட்டது. பிரச்சினைகளைச் சரி செய்யவும் நீண்ட காலம் ஆனது.
அதேநேரம் இன்று பிரதமராக இருக்கும் மோடி பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிந்து அதைச் சரி செய்து வருகிறார். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தீர்கள் என்றால்.. நமது நாட்டில் புது தொழில் முனைவோர் என்பது விரல்விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் இருக்கும். ஆனால், அதன் பிறகு எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கையால் இன்று அதிகளவில் நாம் தொழில் முனைவோர்களை உருவாக்கி வருகிறோம். இன்று சர்வதேச அளவில் அதிக தொழில் முனைவோர்களைக் கொண்ட நாடுகளில் 3ஆவது இடத்தில் நாம் இருக்கிறோம். பொதுமக்கள் மீது அரசு வைத்த நம்பிக்கை தான் இதற்குக் காரணம். இந்தியா பொருளாதார ரீதியாக இப்போது வேகமாக வளரவும் இதுதான் காரணம்.
தொழில் முனைவோராக இருக்கும் நீங்கள் தோல்வியைக் கண்டு எப்போதும் பயப்படக் கூடாது. ஏனென்றால் அந்த தோல்வி தான் நம்மை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும். இதனால் தோல்வியைக் கண்டு துவண்டு போகாமல்.. என்ன தவறு செய்தோம் என்பதைக் கண்டறிந்து அதைத் திருத்திக் கொள்ள முயலுங்கள். ஏனென்றால் தொழில் முனைவோர்கள் தான் நமது நாட்டின் சொத்துக்கள்.. என்னைப் பார்க்கும் பலரும் உங்களுக்கு வேலைப் பளு அதிகமாக இருக்குமோ என்பார்கள். ஆளுநர் என்றால் நிறைய வேலை இருக்கும் என்று மக்களிடையே இருக்கும் மாயை தான் இதற்குக் காரணம். ஆனால் உண்மையில் எனக்கு வேலை அதிகமாக இல்லை. அதேபோல அதிகாரமும் இல்லை. நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் நபர்களை மட்டுமே நான் எதிரியாக நினைக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.