மணிப்பூர் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: கனிமொழி

மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத பா.ஜ.க. அரசை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. தி.மு.க. மகளிர் அணி சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மணிப்பூர் மாநிலத்தில் சமீபத்தில் பெண்கள் இருவர் நிர்வாணப்படுத்தப்பட்டு வீதியில் ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டு வன்கொடுமை செய்யப்பட்டனர். மனிதாபிமானமற்ற இந்த கொடுமையான சம்பவம் அனைவரின் உள்ளத்தையும் பதற வைத்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத பா.ஜனதா அரசை கண்டித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது.

இந்நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தி.மு.க. மகளிர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக துணை பொதுச்செயலாளரும், எம்பியுமான கனிமொழி எம்பி பேசியதாவது:-

உலகத்தில் உள்ளோரின் மனதை எல்லாம் உலுக்கும் வகையிலும் அதிர்ச்சியில் உறைய செய்யும் வகையில் மணிப்பூரில் மிக மோசமான நினைத்து கூட பார்க்க முடியாத வன்கொடுமை நடந்துள்ளது. மணிப்பூரில் பாஜக ஆட்சி நடக்கிறது. மத்தியிலும் பாஜக ஆட்சி உள்ளது. பிரதமர் மோடி மிகப்பெருமையாக இரட்டை என்ஜின் ஆட்சி என சொல்கிறார். மத்தியிலும், மாநிலத்திலும் நாங்கள் இருக்கிறோம். மிகச்சிறப்பாக பணி செய்வாம் என மார்த்தட்டி பேசும் அதே நேரத்தில் மணிப்பூரில் இந்த கொடுமை அரங்கேறி உள்ளது. மணிப்பூரில் குக்கி, நாகா மைத்தேயி ஆகிய 3 இனங்களுக்கு இடையே கலவரங்கள் வெடிக்கிறது. ஒரே நாளில் கலவரம் வெடிக்கவில்லை. ஆண்டாண்டு காலமாக அங்கு பிரச்சனை உள்ளது. நூற்றுக்கணக்கானவர்கள் போராடி அமைதியை கொண்டு வரும் சூழலில் பாஜக ஆட்சியில் அமர்ந்து கலவரத்தை வேடிக்கை பார்க்கிறது.

தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றதும் முதல்வர் ஸ்டாலின், ‛‛எனக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல.. வாக்களிக்காதவர்களுக்கு நான் முதல்வராக செயல்படுவேன்” என முழங்கினார். ஆனால் மணிப்பூரில் பாஜக முதல்வராக இருக்கும் பீரன் சிங் குக்கி இனத்தவரையும், நாகா இனத்தவரையும் கேவலப்படுத்தும் நோக்கில் கொச்சைப்படுத்தும் வகையில் பேசி வருகிறார். அவர்கள் தான் போதை பொருட்களை விளைவித்து வழங்குவதாக பேசி வருகிறார். அவர்களின் உணர்வுகளை புண்படுத்தி உள்ளார். குக்கி, நாகா மக்களின் இடஒதுக்கீட்டு உரிமையை பறிக்கும் வகையில் செயல்படுகிறார். மைத்தேயி மக்கள் தான் ஆட்சி அதிகாரத்தில் உள்ளனர். அவர்களை தான் பாஜக தோளில் சுமந்து வருகிறது. இதனால் குக்கி இன மக்கள் ஒடுக்கப்பட்டவர்களாக உள்ளனர். பாஜக எம்எல்ஏக்களை முதல்வர் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை என செல்லும் சூழல் மணிப்பூரில் உள்ளது.

மைத்தேயி மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து குக்கி இன மக்கள் கடந்த மே மாதம் 3ம் தேதி ஊர்வலம் சென்றனர். அப்போது ஏற்பட்ட கலவரம் இன்னும் முடியவில்லை. ஆனால் பிரதமர் மோடி 7 வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளார் . மோடி வெளிநாடுகளில் இருக்கும் தலைவர்களுடன் விருந்து சாப்பிட்டு மதகலவரம் இல்லை சிறப்பாக ஆட்சி செய்கிறோம் என பொய் பேசி வருகிறார். மணிப்பூரில் பிரச்சனையில் 140க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகள், கிராமங்களை விட்டு விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். அதுவரை வாயை திறந்து ஒரு வார்த்தை கூட பிரதமர் மோடி பேசவில்லை.

உள்துறை அமைச்சர் மணிப்பூர் நிலவரத்தை அறிய அங்கு சென்றார். அப்போதும் கூட அமைதி திரும்பவில்லை. கலவரம் தொடர்ந்து வருகிறது. குக்கி இன மக்கள் மீது பாஜகவினர் தொடர்ந்து வன்முறையை அவிழ்த்த விடுகின்றனர். அவர்கள் மீது வேண்டுமென்றே பழி சுமர்த்தும் வகையில் ஆளும் வர்க்கம் செயல்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியானது. யாராலும் சகித்து கொள்ள முடியாத காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளது. உலகம் முழுவதும் வைரலாக அந்த வீடியோ செல்கிறது. கண்கலங்கி, தலைகுனியும் வகையிலான வீடியோவாக அது உள்ளது. ஒட்டுமொத்த மனித இனமே கண்கலங்கும் வீடியோவாக அது அமைந்துள்ளது. 40 வயது மற்றும் 21 வயது மதிக்கத்தக்க 2 குக்கி இன பெண்களின் ஆடைகளை களைய செய்த ஒரு கும்பல் ஆடு, மாடுகள் போல் இழுத்து சென்று துன்புறுத்தி உள்ளது. தடுக்க சென்ற தந்தையும், தனயன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சகோதரிக்கு நேர்ந்த கொடுமையை தடுக்க சென்ற 19 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ளார் .மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் ஒருவர் நாட்டை பாதுகாக்க ராணுவ வீரராக பணிபுரிந்தவர்கள். நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு அங்கு வன்கொடுமை நடந்துள்ளது. வார்த்தைகளால் சொல்ல முடியாத கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு அவர்கள் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளனர். அதற்கு பிறகு தான் பிரதமர் மோடி மவுனத்தை கலைக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.