மத்திய பா.ஜ.க. அரசு கோமா நிலையில் உள்ளது: ப.சிதம்பரம்!

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பா.ஜ.க. அரசு வீழ்ச்சி அடைந்து விட்டதாகவும், மத்திய பா.ஜ.க. அரசு கோமாவில் உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-

பிகார், மேற்கு வங்கம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன என்பதை ஒப்புக்கொள்வோம். ஆனால், மணிப்பூரில் தொடரும் இடைவிடாத வன்முறைக்கு, பிற மாநில பிரச்னைகளில் இருந்து எப்படி பரிகாரம் தேடிக் கொள்ள முடியும்? அதனை மணிப்பூரின் நிலைமையோடு எப்படி ஒப்பிட முடியும்? அதனை எப்படி மன்னிக்க முடியும்?.

மணிப்பூர் சமவெளி பகுதிகளில் குக்கிகள் எஞ்சியிருக்கிறார்களா? அல்லது சுராசந்த்பூர் மற்றும் மணிப்பூரின் பிற மலை மாவட்டங்களில் மைதேயி இனத்தவர்கள் மீதி யாராவது இருக்கிறார்களா?
அறிக்கைகள் உண்மையாக இருந்தால், மணிப்பூரில் கிட்டத்தட்ட இன அழிப்பு நடந்து முடிந்துவிட்டது.
முதல்வர் மற்றும் அவரது அமைச்சர்களின் ஆணை அவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களைத் தாண்டி இயங்க முடியாது.

மத்திய அரசு திறமையற்று மற்றும் ஒருசார்புடன் இயங்குவது மட்டுமல்லாமல், கேவலமான ஒப்பீடுகளை செய்து திரைக்கு பின்னால் ஒளிந்து கொள்வது இரக்கமற்றது மற்றும் கொடூரமானது. மேலும், பிகார், மேற்கு வங்கம் மற்றும் ராஜஸ்தானில் கடுமையான நடவடிக்கை தேவைப்பட்டால், நிச்சயமாக மாநில அரசுகளை கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துங்கள், அதற்காக, மணிப்பூரில் நடக்கும் காட்டுமிராண்டித்தனத்தை மன்னிக்க முடியாது. மணிப்பூரில் பிரேன் சிங் தலைமையிலான பாஜக அரசு வீழ்ச்சி அடைந்து விட்டது. மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசும் கோமாவில் உள்ளது. இவ்வாறு சிதம்பரம் கூறியுள்ளார்.