கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று நம்புகிறேன்: மா.சுப்பிரமணியன்!

மத்திய அரசின் நிதியில் கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று நம்புவதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை மற்றும் மதுரை அரசு மருத்துவக்கல்லூரி இரத்த தான கழகம் சார்பில் ரத்ததான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி மதுரையில் இன்று நடைபெற்றது. ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலான 10 கிலோ மீட்டர் தூர மாரத்தான் போட்டியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். துவக்க நிகழ்ச்சியில், வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் கலந்து கொண்டனர். மதுரை மருத்துவ கல்லுாரியில் இருந்து காந்தி மியூசியம், ராஜா முத்தையா மன்றம், பூ மார்க்கெட், தெப்பக்குளம் சந்திப்பு, வைகை கரை ரோடு வழியாக மீண்டும் மருத்துவக்கல்லுாரியை அடையும் வகையில் மாரத்தான் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்றோருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார். தொடர்ந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரத்ததானம் செய்தார். தொடர்ந்து மதுரை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இயற்கை எரிவாயு நிலையத்தை அவர் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

சட்டமன்றத்தில் கடந்த நிதியாண்டில் அறிவிக்கப்பட்ட 110 அறிவிப்புகள் அடுத்த நிதியாண்டுக்குள் நிறைவேற்றப்படும். மதுரை ராஜாஜி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை தென்னக மக்களுக்கு மிகச் சிறப்பான மருத்துவ சேவையை ஆற்றி வருகிறது. 60 வயதான நான் 70 முறைக்கு மேல் ரத்ததானம் செய்துள்ளேன். ரத்த தானம் கொடுப்பதில் 10 ஆண்டுகளுக்கு முன் தமிழகம் முதலிடத்தில் இருந்தது. தற்போது மேற்குவங்கம் முதலிடத்தில் உள்ளது. ரத்த தானம் கொடுப்பதில் தமிழகம் மீண்டும் முதலிடத்திற்கு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, ரூ. 2 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை மற்றும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ரேடியோ ஃப்ரீகுவன்சி சாதனம் நிறுவப்பட்டு உள்ளது. மேலும் Computerrised blood donar app என்ற பிரத்யேக கைப்பேசி செயலி உருவாக்கப்பட்டு ரத்த தானம் செய்வோரை ஒருங்கிணைக்க, ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டேராடூனில் நடைபெற்ற மாநாட்டில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மாண்சுக் மாண்டவியாவிடம் தமிழக அரசின் 14 கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது. அதில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை உடனடியாக தொடங்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ்க்கான டெண்டர் 2024க்குள் முடிந்துவிடும். மருத்துவமனை கட்டிடம் கட்டி முடிக்க 4 ஆண்டுகள் ஆகலாம் என தெரிவித்துள்ளனர். 2028க்குள் எய்ம்ஸ் வர வாய்ப்புள்ளது.

ஜப்பான் நிறுவனமான ஜெய்க்காவின் நிதி உதவி இன்றி, மத்திய அரசே நிதி ஒதுக்கி வளர்ந்து வரும் மாநகரான கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நிச்சயமாக மத்திய அரசின் நிதி பங்களிப்பில் கோவை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் நடைபெறும் என நம்புகிறோம்” என தெரிவித்தார்.

வளர்ச்சியை தடுப்பவர்கள் நாட்டின் எதிரிகள் என ஆளுநர் ரவி பேசியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் ஆளுநரை தான் மக்கள் எதிரியாகப் பார்க்கிறார்கள்’ என தெரிவித்தார்.

முன்னதாக மாரத்தான் ஓட்டப்பந்தய போட்டியில் பங்கேற்ற பொறியியல் கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் மதுரை மாவட்ட மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் உதிரம் 2023 என்ற தலைப்பில் குருதிக் கொடை விழிப்புணர்வு மாரத்தான் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட மதுரை தியாகராஜா பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயின்று வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் தினேஷ்குமார்(20) என்ற மாணவர் மாரத்தான் போட்டியில் பங்கேற்ற பின்பு மேடையின் அருகே உள்ள கழிவறைக்கு சென்ற போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி தினேஷ் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட மாணவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் ரத்னவேல், “மதுரையில் இன்று காலை இரத்ததானம் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி மதுரை மருத்துவ கல்லூரியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாணவர் தினேஷ், மாரத்தான் முடிந்து 1 மணி நேரத்திற்கு மேலாக சக கல்லூரி மாணவர்களுடன் இயல்பாகவே இருந்துள்ளார். அதன் பிறகே மாணவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அரசு ராஜாஜி மருத்துவமனையில் காலை 8.45 மணிக்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாணவர் தினேஷுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரின் இதயத்துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் மிகக்குறைவாக இருந்தது, சுய நினைவு திரும்பவே இல்லை. காலை 10.10 மணியளவில் அவருக்கு திடீரென கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டதை அடுத்து, சிகிச்சை பலனின்றி 10.45 மணியளவில் உயிர் பிரிந்தது” எனத் தெரிவித்துள்ளார்.