மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கொச்சைப்படுத்துவோர் பற்றி கவலை கொள்ள வேண்டாம்: மு.க.ஸ்டாலின்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கொச்சைப்படுத்துவோரைப் பற்றி கவலை கொள்ள வேண்டாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் முகாம் தொடக்க நிகழ்ச்சி தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இம்முகாமில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று விண்ணப்பங்கள் பதிவேற்றும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர், பள்ளி வளாகத்திலேயே மகளிர் சுய உதவி குழுவைச் சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடினார். மேலும், விண்ணப்பங்கள் அளிக்க வரும் மகளிருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத்துவ முகாமையும் பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

முதல்வராக பதவியேற்ற உடன், நகரப் பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்துக்கான கோப்புகளில் தான் முதல் கையெழுத்து இட்டேன். இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை 283 கோடி முறை பெண்கள் இலவச பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த திட்டம் நிறைவேற்றும்போது தமிழக அரசுக்கு கடும் நிதி நெருக்கடி இருந்த போதிலும் மகளிர் பயன்பெற வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்டு திட்டத்தை செயல்படுத்தினோம்.

மகளிர் உரிமை தொகை திட்டமும் அப்போதே செயல்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். நிதிச் சூழல் காரணமாக தற்போது பயன்பாட்டுக்கு வருகிறது. மகளிர் சுயமரியாதையுடன் வாழவும், பொருளாதார மேம்பாடு அடையவும் உதவும். இந்தத் திட்டத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் சிலர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். கொச்சைப்படுத்தி பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதுபற்றியெல்லாம் யாரும் கவலை கொள்ள வேண்டாம்.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவியர்கள் தொடர்ந்து உயர்கல்வி பெற வேண்டும் என்பதற்காக ’புதுமைப் பெண்’ திட்டத்தை அறிமுகப்படுத்தி இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் மூலம் கல்லூரி மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. அதேபோல மகளிர் உரிமை தொகை திட்டமும் செப்டம்பர் 15 முதல் பயன்பாட்டுக்கு வரும். பெண்களுக்கு திராவிட இயக்கம் வழங்கியுள்ள மற்றுமொரு மாபெரும் கொடை தான் இந்த திட்டம். மகளிரின் சமூக பொருளாதார நிலையை உயரச் செய்யும் வகையிலான இந்தத் திட்டத்தால் பெண்கள் சுயமரியாதையும் பொருளாதார விடுதலையையும் பெறுவர். நடப்பு ஆண்டில் இந்த திட்டத்தை நிறைவேற்ற ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் தரப்பட இருப்பது உதவிப் பணம் அல்ல, இது மகளிருக்கான உரிமைப் பணம்.

ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி வரை இந்த திட்டத்துக்கான விண்ணப்பங்கள் பதிவேற்றும் முகாம்கள் சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் செயல்படுத்தப்படும். இதுக்காக தமிழகம் முழுக்க 39 ஆயிரத்து 929 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் விண்ணப்பங்களை பதிவேற்றும் பணியில் 68 ஆயிரத்து 190 தன்னார்வலர்களும், மகளிருக்கு வழிகாட்டுதல் வழங்கிட 35 ஆயிரத்து 925 தன்னார்வலர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தகுதி வாய்ந்த பயனாளிகள் யாரும் விடுபடாத வகையில் இந்த முகாம்கள் மூலம் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு திட்டம் பயன்பாட்டுக்கு வரும். எல்லாருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியின் சாதனை சரித்திரம் தொடரும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

மறைந்த கருணாநிதி முதல்வராக இருந்த போது மகளிர் சுய உதவிக்குழுக்களை தருமபுரியில்தான் தொடங்கி வைத்தார். இந்த சுய உதவிக்குழுக்களை கொண்டு இன்று வரை எத்தனை பெண்கள் வங்கிகளில் குறைந்த வட்டியில் கடனை வாங்கி சிறுதொழில் செய்து வருகிறார்கள். படித்தாலும் படிக்காவிட்டாலும் பெண்கள் ஆணுக்கு சமம் என்பதை உணரவைத்த இந்த தருமபுரியில்தான் இன்று முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கான உரிமைத் தொகை முகாமை தொடக்கி வைத்தார். அப்போது அங்கு வந்த பெண்களிடம் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின், திட்டம் குறித்து விளக்கினார். மேலும் இந்த திட்டம் உங்களுக்கு எத்தனை உதவியாக இருக்கும் என்பதையும் அவர்களிடமே கேட்டுத் தெரிந்துக் கொண்டார். அப்போது மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்களை எப்படி ஆய்வு செய்கிறார்கள் என்பது குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். அவர் முன்பு ஒரு திரை வைக்கப்பட்டிருந்தது. அதில் பயனாளி கைரேகை வைத்த பின்பு செல்போனிலேயே என்னென்ன தகவல்கள் கிடைக்கிறது என்பதை திரையில் பார்த்தார். மேலும் விண்ணப்பத்தை சமர்ப்பித்தவுடன் பெண்ணின் செல்போனுக்கு வந்த மெசேஜை பார்த்துவிட்டு சம்பந்தப்பட்ட பெண்ணிடம் இதுகுறித்து விளக்கமளித்தார். விண்ணப்பத்தை கொடுத்துவிட்டீர்கள். இந்த உதவித் தொகை திட்டத்திற்கு நீங்கள் தகுதியானவரா என அதிகாரிகள் ஆய்வு செய்து உங்களுக்கு தகவல் சொல்வார்கள் என்றார்.

மேலும் அங்கிருந்த பெண்கள் இந்த திட்டம் குறித்து பேசினர். அப்போது பெண் ஒருவர் தான் கூலி வேலைக்கு செல்வதாகவும் அதில் மாதத்தில் 10 நாட்கள் சும்மா இருப்பதாகவும் மீதம் உள்ள நாட்களில் சென்றால் குறைந்த அளவு ஊதியத்தில் குடும்பத்தை நடத்த வேண்டும். பிளஸ் 2 முடித்த என் மகளையும் கல்லூரியில் படிக்க வைக்க வேண்டும். இதற்கெல்லாம் இந்த ரூ 1000 எனக்கு உதவியாக இருக்கும் என்றார்.

பின்னர் இன்னொரு பெண்ணோ இந்த திட்டம் எங்களுக்கு உதவியாக இருக்கும். அதை அறிவித்த முதல்வருக்கு நன்றி. அதிலும் எங்கள் தருமபுரி மாவட்டத்தில் இந்த திட்டத்தை அறிவித்தது எங்களுக்கு பெருமை அளிக்கிறது. உங்களை பார்க்கும் போது கடவுளே நேரில் வந்து வரம் கொடுத்தது போல் இருக்கிறது என்றார். உடனே முதல்வர் குறுக்கிட்டு இதெல்லாம் நீங்களா பேசுறீங்களா இல்லை யாராவது சொல்லிக் கொடுத்து பேசுறீங்களா என கேட்டார். அதற்கு அந்த பெண் இல்லை சார் உங்களை பார்த்ததும் மனதில் இருப்பது வெளியே வருகிறது என்றார். உடனே முதல்வர் ஆட்சி எப்படி இருக்கிறது என கேட்டார். அதற்கு அந்த பெண் நன்றாக இருக்கிறது சார் என்றார். முதல்வர் நகைச்சுவையாக கேட்ட போது அங்கிருந்த பெண்களும் அதிகாரிகளும் சிரித்துவிட்டனர்.