பாஜக ஆட்சி தொடர்ந்தால் நாட்டில் ஜனநாயகம் இருக்காது: முத்தரசன்

பாஜக ஆட்சி தொடர்ந்தால் நாட்டில் ஜனநாயகம் இருக்காது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன் கூறினார்.

திருச்சியில் இன்று செய்தியாளர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மணிப்பூரில் மூன்று மாதங்களாக இன்று வரை வன்முறை நடந்து வருகிறது. ஆனால் அதை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குஜராத்தில் கலவரத்தை ஏற்படுத்தி பாஜக வெற்றி பெற்றது போல, நாடு முழுவதும் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். அதன் ஒரு பகுதியாக பொது சிவில் சட்டத்தை கொண்டு வந்து மக்களை பிளவுப்படுத்த வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு செயல்பட்டு வருகின்றனர்.

அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி மீது விரைந்து பாய்ந்த அமலாக்கத்துறை, முன்னாள் அமைச்சர்கள் விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. குறிப்பாக குட்கா வழக்கில் அனைத்து ஆதாரங்கள் இருந்தும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது, நடவடிக்கை எடுக்கவில்லை. அமலாக்கத்துறை பாகுபாடாக செயல்பட கூடாது.

பாஜக ஆட்சி தொடர்ந்தால் நாட்டில் ஜனநாயகம் இருக்காது, அரசியலமைப்பு சட்டம் மாற்றியமைக்கப்படும். எனவே தான் ஜனநாயகத்தை காக்கும் வகையில் அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்துள்ளோம். மக்களவையில் மணிப்பூர் சம்பவம் குறித்து பிரதமர் விவாதிக்க முன்வரவில்லை. எதிர்க்கட்சிகள் கூச்சல் குழப்பம் செய்யவில்லை. பிரதமர் தான் நாடாளுமன்றத்திற்கு வர மறுக்கிறார். குடியரசுத் தலைவர் ஆட்சியை மணிப்பூரில் நடைமுறைப்படுத்த சுமூக நிலை எட்டப்பட வேண்டும்.

நாளை இந்தியா முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசைக் கண்டித்தும், மணிப்பூர் சம்பவத்தை கண்டித்தும் அகில இந்திய அளவில் போராட்டம் நடைபெறும். மணிப்பூர் சம்பவத்திற்கு பொறுப்பேற்று பிரதமர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும்.

டெல்டா பாசன விவசாயத்திற்காக கர்நாடக அரசு முறையாக தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்ட சாத்தியம் கிடையாது. தமிழக அரசு அனுமதியின்றி கட்ட முடியாது.
தமிழகம் முழுவதும் நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சிகளில் பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வரன்முறை செய்ய வேண்டும். ஒப்பந்த முறையில் பணிக்கு விடும் முறை கைவிட வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இவ்வாறு முத்தரசன் கூறினார்.