கோடநாடு விவகாரம்: ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஓபிஎஸ் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் டிடிவி பங்கேற்கிறார்!

கோடநாடு வழக்கில் திமுக அரசு மெத்தனம் காட்டுவதாகவும் வழக்கை விரைந்து விசாரித்து உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வலியுறுத்தி வரும் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் அணி போராட்டம் நடத்துகிறது. ஓபிஎஸ் அணி நடத்தும் இந்த ஆர்ப்பாட்டத்தில் டிடிவி தினகரனின் அமமுகவும் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ளது கோடநாடு எஸ்டேட். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்த வரைக்கும் அவ்வப்போது இங்கு ஓய்வு எடுப்பது வழக்கம். ஜெயலலிதா மறைந்த பின்னர் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந் தேதி அதாவது எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் அங்கு கொள்ளை முயற்சி நடந்தது. இதில், அந்த எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கோடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த கொலை கொள்ளைக்குப் பிறகு அடுத்தடுத்து நடந்த விபத்துகள், தற்கொலைகள், மரணங்கள் பலவித சந்தேகங்களை கிளப்பின. அதிமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற விசாரணையில் உருப்படியாக எதுவும் சிக்கவில்லை.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை மீண்டும் தீவிரமடைந்தது. சிபிசிஐடி தற்போது இந்த வழக்கை விசாரித்து வருகிறது. நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கோடநாடு விவகாரத்தை கையில் எடுத்த ஓபிஎஸ் அணி, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கினை விரைந்து விசாரித்து, குற்றவாளிகளை தண்டிக்க நடவடிக்கை எடுக்க கோரி ஓ பன்னீர் செல்வம் கோரினார். அதுமட்டும் இன்றி இந்த விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமு க அரசை வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில், அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் ஆகஸ்டு 1-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஓபிஎஸ் அணி அறிவித்துள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் மதுரையில் அதிமுக பிரம்மாண்ட மாநாடு நடத்த உள்ளது. இந்த நிலையில், ஓபிஎஸ் அணி மாநிலம் முழுவதும் தனது பலத்தை காட்டும் வகையில், கோடநாடு விவகாரத்தை வைத்து எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாகவும் இந்த ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இந்த நிலையில், ஓபிஎஸ் அணி நடத்தும் இந்த ஆர்ப்பாட்டத்தில் டிடிவி தினகரனின் அமமுகவும் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேனியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஓ பன்னீர் செல்வத்துடன் இணைந்து டிடிவி தினகரனும் பங்கேற்கிறார். இது தொடர்பாக அமமுக தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறப்பட்டுள்ளதாவது:-

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மெத்தனப்போக்கோடு செயல்படும் தி.மு.க அரசைக் கண்டித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் 01.08.2023 அன்று நடைபெறவிருக்கும் கண்டன ஆர்பாட்டங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பங்கெடுக்கிறது. தேனியில் நடைபெறும் கண்டன ஆர்பாட்டத்தில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மிகவும் நேசித்த இடமான கோடநாட்டில், அவரது மறைவிற்குப் பின் நடைபெற்ற கொள்ளை மற்றும் கொலை குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை ஆட்சிக்கு வந்த 90 நாட்களுக்குள் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனைப் பெற்று தருவோம் என வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது, ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் முடிவுற்ற நிலையில், இவ்வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. இவ்வாறு வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத வகையில் மெத்தனப் போக்கோடு தூங்கி வழியும் தி.மு.க அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் 01.08.2023 செவ்வாய்கிழமை அன்று காலை10:30 மணியளவில் ஒருங்கிணைப்பாளர் திரு.ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அணியினர் கண்டன ஆர்பாட்டங்களை நடத்த உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.