கிருஷ்ணகிரியில் திமுக நிர்வாகி மீது நாம் தமிழர் கட்சியினர் தாக்குதல்!

நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தின்போது அக்கட்சியினர் மீது நில அபகரிப்பு புகார் கொடுக்க தனியாக சென்ற திமுக நிர்வாகியை கும்பலாக சேர்ந்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த புலியாண்டப்பட்டியை சேர்ந்தவர் அய்யப்பன். குறவர் சமுதாயத்தை சார்ந்த இவரை ஆந்திர மாநிலம், சித்தூர் காவல் நிலையத்திலிருந்து வந்த போலீசார் கடந்த ஜூன் மாதம் நகைக்கடை திருட்டு வழக்கில் கைது செய்து உள்ளனர். அவரது குடும்பத்தினர் இதனைத் தட்டிக் கேட்டபோது, அவரது தாய் கண்ணம்மா, உறவினர் அருணா, அவருடைய 7 வயது மகன் உட்பட அனைவரையும் கைது செய்து சித்தூருக்குக் அழைத்து சென்று உள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்களின் உறவினர்கள் தமிழ்நாடு காவல்துறைக்கு இணைய வழியாகப் புகார் அளித்து இருக்கின்றனர். இந்த தகவல் ஆந்திர போலீசாருக்கு தெரியவரவே, ஆத்திரமடைந்த அவர்கள் தமிழ்நாட்டு எல்லைக்குள் மீண்டும் நுழைந்து மேலும் 3 பேரை கைது செய்து உள்ளனர். இப்படி 9 தமிழர்களை கைது செய்த ஆந்திர போலீசார், அவர்களை சித்தூர் காவல் நிலையத்திலேயே அடைத்து வைத்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

அய்யப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அந்திர போலீஸ் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாகவும், பெண்களைத் துன்புறுத்தி வன்கொடுமைக்கு முயன்றதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியானது. குறிப்பாக மறைவிடங்களில் மிளகாய் பொடியைக் கொட்டி ஆந்திர போலீசார் துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். அதை தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இந்த விவகாரத்தில் தலையிட்டதை தொடர்ந்து 2 பேரை மட்டும் வைத்துக்கொண்டு 7 பேரை விடுவித்தனர். இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டது.

அதேபோல் நாம் தமிழர் கட்சியின் மகளிர் அணி சார்பில் ஆந்திர போலீசாருக்கு எதிராக போச்சம்பள்ளி அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த மேகநாதன் என்ற திமுக பிரமுகர், நாம் தமிழர் கட்சியினர் விவசாய நிலங்களை ஆக்கிரமித்து மிரட்டுவதாக கூறி, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா என்று கேள்வி எழுப்பி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் தனியாக சிக்கிய திமுக நிர்வாகியை கும்பலாக சேர்ந்து தாக்கினர். இதனைக் கண்ட போலீசார் உள்ளே புகுந்து திமுக நிர்வாகியை காப்பாற்ற முயன்றனர். ஆனாலும் தாக்குதலை நிறுத்தாத நாம் தமிழர் கட்சியினர் போலீசார் மீதும் தாக்குதல் நடத்தினர். ஒரு வழியாக போலீசார் போராடி திமுக நிர்வாகியை அங்கிருந்து மீட்டுச் சென்றனர். இந்த நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் திமுகவினர் புகார் அளித்து உள்ளனர்.