மத்திய அரசின் காடுகள் சட்டம் 2023 அவசியமற்றது. அதுவும் ஜி20 தலைமையேற்று நடத்திக் கொண்டிருக்கும் சூழலில், அந்தச் சட்டம் அவசியமற்றது. அதை நிச்சயமாக பாமக கடுமையாக எதிர்க்கும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
G20 மற்றும் COP28,காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில், பசுமை தாயகம் மனிதசங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பசுமைத் தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-
இயந்திர புரட்சியால் வளர்ச்சியடைந்த மேற்கத்திய நாடுகள் புதைபடிம எரிபொருள்களைப் பயன்படுத்தி அந்நாடுகள் உயர்ந்துவிட்டன. உலகின் 80 சதவீதமான கார்பன் உமிழ்வுகள் இந்த ஜி20 நாடுகளால் ஏற்படுத்தப்படுகிறது. எனவேதான், காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த இந்த ஜி20 நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தற்போது இந்தியா இந்த ஜி20 அமைப்புகளின் மாநாட்டை நடத்துவதற்கு தலைமை ஏற்று இருக்கிறது. எனவே இந்தியாவுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. உலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு நல்ல வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. தமிழகத்தில் எந்தவொரு அமைப்பும், அரசியல் கட்சியும் இதுபோன்ற நிகழ்வை நடத்தவில்லை. நம் ஒருவருக்கொருவர் இடையே உள்ள சிறு சிறு பிரச்சினைகளைக் காட்டிலும், காலநிலை மாற்றம் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது.
இந்தச் சூழலில், மத்திய அரசின் காடுகள் சட்டம் 2023 அவசியமற்றது. அதுவும் ஜி20 தலைமையேற்று நடத்திக் கொண்டிருக்கும் சூழலில், அந்த சட்டம் அவசியமற்றது. அதை நிச்சயமாக பாமக கடுமையாக எதிர்க்கும். நிச்சயமாக நாடாளுமன்றத்தில் அந்த சட்டத்தை எதிர்க்கப் போகிறோம். அதேபோல், தமிழ்நாடு பருவநிலை கொள்கை என்று கூறினால் மட்டும் போதுமா? அதை நடைமுறைப்படுத்த வேண்டும். தற்போதுள்ள சூழலில், காலநிலை அவசரநிலை பிரகடனத்தை அறிவிக்க வேண்டும். பேதங்கள் இன்றி அனைத்து அரசியல் கட்சிகளும் காலநிலை மாற்ற விவகாரத்தில் ஒன்றிணைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.