ஜனநாயகக் கோயில் குழப்பத்திற்கும் சீர்குலைவுக்கும் தள்ளப்படுகிறது: கபில் சிபில்!

மணிப்பூர் வன்முறைக்கு பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவிக்காமலும், மக்கள் பிரதிநிதிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுக்கும் போது தான் ஜனநாயகக் கோயில் குழப்பத்திற்கும் சீர்குலைவுக்கும் தள்ளப்படுகிறது என முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபில் தெரிவித்துள்ளார்.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மே மாத தொடக்கத்தில் கலவரம் மூண்டது. அதன்பிறகு நீடித்து வரும் வன்முறையில் இதுவரை 160-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். இந்தச் சூழலில், காங்போக்பி மாவட்டத்தில் கடந்த மே 4-ஆம் தேதி இரண்டு பழங்குடியினப் பெண்கள், மற்றொரு தரப்பு ஆண்களால் ஆடைகள் களையப்பட்டு, ஊா்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் குறித்த விடியோ கடந்த புதன்கிழமை வெளியானது. இக்கொடூரம், நாட்டையே அதிா்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த நிலையில் கடந்த 20 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளே மணிப்பூர் வன்முறை குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் முடங்கியது. இதன்பின்னர் அடுத்த நாளும் மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக இரு அவைகளிலும் பேச வேண்டும் எதிர்க்கட்சிகள் பதாகைகளை ஏந்தி கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் முடங்கியது.

இந்த நிலையில் இன்று திங்கள்கிழமை (ஜூலை.24) நாடாளுமன்றம் கூடியதும் மணிப்பூர் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோன்று மாநிலங்களவையிலும் மணிப்பூர் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.

இந்நிலையில், அமளியில் ஈடுபட்ட ஆம் ஆத்மி உறுப்பினர் சஞ்சய் சிங் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்படுதாக அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் அறிவித்தார். சஞ்சய் சிங் நீக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டதால் அவையில் பதற்றமான சூழல் நிலவியது.

இடைஞ்சல்களையும் இடையூறுகளையும் ஆயுதமாக ஏந்தி ஜனநாயகத்தின் கோயில்களான நாடாளுமன்ற இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் களங்கப்படுத்துகின்றனர் என்று ஜகதீப் தங்கர் தெரிவித்தார்.

இந்த நிலையில், மக்கள் பிரதிநிதிகளின் கேள்விகளுக்கு பிரதமர் பதிலளிக்க மறுக்கும் போது தான் ஜனநாயகக் கோயில் குழப்பத்திற்கும் சீர்குலைவுக்கும் தள்ளப்படுகிறது என முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபில் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்க பதிவில் கூறியுள்ளதாவது:-

இடைஞ்சல்களையும் இடையூறுகளையும் ஆயுதமாக ஏந்தி ஜனநாயகத்தின் கோயில்களான நாடாளுமன்ற இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் களங்கப்படுத்துகின்றனர் என்று மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தங்கர் கூறினார். இதற்கு, மணிப்பூர் வன்முறையின் இத்தனை கொடூரங்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவிக்காமலும், மக்கள் பிரதிநிதிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுக்கும் போதுதான் ஜனநாயகக் கோயில் “குழப்பத்திற்கும் சீர்குலைவுக்கும் தள்ளப்படுகிறது”. இவ்வாறு கபில் சிபில் தெரிவித்துள்ளார்.