சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரான டி ராஜா திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவருக்கு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மணிப்பூர் வன்முறை மற்றும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை கண்டித்தும், நீதி கேட்டும் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுதுள்ளன. சென்னையில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மணிப்பூர் வன்முறைக்கு நீதி கேட்டு இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி ராஜா பங்கேற்றார். அப்போது அவர் மணிப்பூர் மாநில அரசு மற்றும் மத்திய பாஜக அரசை குற்றம்சாட்டி பேசினார்.
ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு டி ராஜா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது திடீரென்று அவர் மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து கட்சியினர் அவரை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்தவுமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே டி ராஜா மயங்கி விழுந்த நிலையில் அவரை மீட்டு கட்சியினர் காரில் ஏற்றும் வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.