எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் ‘இண்டியா’ என்ற பெயர் குறித்து பேசியுள்ள பிரதமர் மோடி, ‘இந்தியன் முஜாகிதீன், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவிலும் கூட ‘இண்டியா’ என்ற பெயர் உள்ளதாக கேலி செய்துள்ளார்.
பாஜக எம்.பி.க்களின் வாராந்திர கூட்டத்தில் இன்று பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதில் அவர் பேசும்போது கூறியதாவது:-
இதுநாள் வரையில் நான் இதுபோன்ற திக்கற்ற எதிர்க்கட்சியினரைப் பார்த்தது இல்லை. ‘இண்டியா’ என்ற பெயருக்காக அவர்கள் தங்களையே புகழ்ந்து கொள்கிறார்கள். கிழக்கிந்திய கம்பெனி, இந்தியன் முஜாகிதீன், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா போன்றவற்றிலும் இந்தியா என்ற பெயர் இருக்கிறாது. அதனால், ‘இண்டியா’ என்ற பெயரால் ஒன்றும் ஆகிவிடாது. நாட்டின் பெயரை மட்டும் வைத்துக்கொண்டு மக்களை தவறாக வழிநடத்த முடியாது.
தோல்வி, சோர்வு, நம்பிக்கையின்மை போன்றவற்றால் மோடியை எதிர்ப்பது ஒற்றையே கொள்கையாக வைத்திருக்கிறார்கள். அவர்கள் எதிர்க்கட்சிகளாக மட்டுமே இருக்க முடிவு செய்திருப்பதையே அவர்களின் நடத்தை காட்டுகிறது. வரும் 2024 மக்களவைத் தேர்தலில் மக்களின் ஆதரவுடன் பாஜக எளிதில் வெற்றி பெறும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
கடந்த வியாழக்கிழமை முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் ‘மணிப்பூர் மாநில கலவரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும். அதன்பிறகு இந்த விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும்’ என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதனால் வியாழக்கிழமை தொடங்கி நேற்று வரையிலான மூன்று நாள்களிலும் எந்தவிதமான அலுவல்களும் நடக்கவில்லை. இந்தப் பின்னணியில் பிரதமர் மோடியின் எதிர்க்கட்சிகள் மீதான இந்த விமர்சனம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, மக்களவை இன்று 4-வது நாளாக கூடியதும் மணிப்பூர் வன்முறை தொடர்பாக எதிர்க்கட்சிகள் முழக்கங்கள் எழுப்பின. சபாநாயகர் ஓம் பிர்லா அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்களை அமைதிகாத்து இருக்கையில் அமருமாறும் கூறினார். அவையில் தொடர்ந்து கூச்சலிடுவதால் எந்தத் தீர்வும் கிடைக்காது என்றும், முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க கேள்வி நேரத்தை அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பவே, சபாநாயகர் அவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார். அதேபோல் மாநிலங்களவையிலும் அமளி நீடித்ததால் அவையை 12 மணி வரை அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஒத்திவைத்தார்.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தை தொடர்ந்து நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் பாஜக எம்பிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் தங்களது கோரிக்கையில் இருந்து எதிர்க்கட்சிகள் பின்வாங்கப் போவது இல்லை என்பதால், அமளிகளுக்கு இடையில் அலுவல்களை நடத்த அரசு முடிவெடுத்திருந்தது. இதனிடையே இண்டியா கூட்டணி மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடைசியாக கடந்த 2003-ம் ஆண்டு வாஜ்பாய் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.