ராஜ்யசபாவில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் விடிய விடிய போராட்டம் நடத்தினர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத் தொடர் தொடங்கியது முதலே மணிப்பூர் விவகாரத்தால் நாடாளுமன்ற இரு சபைகளும் முடங்கி வருகின்றன. மணிப்பூர் வன்முறைகள் தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் தர வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை. நாடாளுமன்றத்தில் நேற்று 3-வது நாளாக எதிர்க்கட்சி எம்.பிக்கள், மணிப்பூர் விவகாரத்தை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர். ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபையின் மையப் பகுதியில் முழக்கமிட்டனர். அப்போது ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் பெயரைக் குறிப்பிட்டு அவரை இருக்கையில் அமர வேண்டும் என ராஜ்யசபா தலைவர் ஜெகதீப் தன்கர் தொடர்ந்து வலியுறுத்தினார். இதனை மீறி சஞ்சய் எம்.பி. தொடர் முழக்கங்கள் எழுப்பினார். இதனால் இந்த கூட்டத் தொடர் முழுவதும் சஞ்சய் சிங் எம்.பி. சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சஞ்சய் சிங் எம்பி சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் அவருடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இணைந்து போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் இரவு முழுவதும் விடிய விடிய நடைபெற்றது. நாடாளுமன்ற வளாகத்திலேயே தற்போதும் சஞ்சய் சிங் எம்பி அமர்ந்து தமது சஸ்பெண்ட் உத்தரவை நீக்க கோரி போராடி வருகிறார்.