தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இதுவரை எந்தவித பயனும் இல்லை. ஆனாலும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் மட்டும் தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது.

இந்நிலையில், இலங்கை நெடுந்தீவு பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும், 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இலங்கை கடற்படையால் மீனவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்மையில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே இந்தியா வருகை தந்தார். அப்போதும் தமிழ்நாடு மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்கிற நம்பிக்கை இருந்தது. ஆனால் தமிழ்நாடு மீனவர் பிரச்சனையில் ஆக்கப்பூர்வமான எந்த ஒரு முடிவும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று ராமேஸ்வரம் மண்டபம் பகுதி மீனவர்கள் 9 பேர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இந்த 9 மீனவர்களும் சென்ற 2 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. இச்சம்பவம் மண்டபம் மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் கூறுகையில், தமிழ்நாட்டு மீனவர்கள் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யாமல் உடனடியாக அவர்களை விடுதலை செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.