சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து பேசினார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியிருந்த வாட்ச் வெளிநாட்டு கடிகாரம் என்றும் அதை வாங்க அவருக்கு ஏது அவ்வளவு பணம் என்றும் கேள்வி எழுந்தது. இந்த நிலையில் அது ரபேல் வாட்ச் என்று அண்ணாமலை ஒரு பிரஸ் மீட்டில் தெரிவித்தார். அதற்கான ரசீதை தருமாறு திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கு அண்ணாமலையோ வாட்ச் வாங்கியதற்கான ரசீது தன்னிடம் இருப்பதாகவும் அதை விரைவில் வெளியிடுவதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியல் என்னுடைய சொத்து பட்டியலையும் வெளியிடுவேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி DMK Files முதல் பாகத்தை வெளியிட்டிருந்தார். அதில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், செந்தாமரை, சபரீசன், செல்வி, மு.க.முத்து, மு.க.அழகிரி, துரை அழகிரி, கலாநிதி மாறன், தயாநிதிமாறன் ஆகியோரின் படங்களுடன் வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்த பட்டியலையும் அவர்களுடைய பிரமாண பத்திரத்தையும் பார்த்தால் அதில் வித்தியாசம் இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் திமுக ஊழல் பட்டியல் பாகம் 2-ஐ ஜூலை 9ஆம் தேதி வெளியிடுவதாக தெரிவித்திருந்தார். ஆனால் அவர் வெளியிடவில்லை. இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 110 நாட்கள் பாதயாத்திரை நடத்தவுள்ளார். இது வரும் 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்குகிறது. இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்கிறார். நிறைவு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இந்த நிலையில் இன்றைய தினம் ஆளுநர் ஆர்.என்.ரவியை அண்ணாமலை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அண்ணாமலை தனது பாதயாத்திரை தொடக்க விழா, நிறைவு விழாவுக்கு வருமாறு ஆளுநருக்கு அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் DMK Files பாகம் 2ஐ ஆளுநரிடம் அண்ணாமலை ஒப்படைத்துள்ளதாகவும் அதனுடன் டாஸ்மாக் குறித்த வெள்ளை அறிக்கையையும் அவர் ஒப்படைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.