கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வளையமாதேவி கிராமத்தில் என்.எல்.சி நிறுவனம் நெற் பயிர்களை அழித்து கால்வாய் வெட்டும் பணியை மேற்கொள்ள கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. என்எல்சிக்கு எதிராக நெய்வேலி அருகே கன்னிதோப்பு பாலத்தில் லாரி டயர்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து சென்றதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் சுரங்கம் அமைத்து நிலக்கரி எடுத்து மின்சாரம் தயாரித்து வருகிறது. இந்நிறுவனம் 2வது சுரங்க விரிவாக்க பணிக்காக வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கத்தாழை, கரிவெட்டி உள்ளிட்ட கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்தி உள்ளது. இந்நிலையில் தங்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு கூடுதல் இழப்பீடு கேட்டும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கக் கோரியும் கிராம மக்கள் பல கட்ட போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் சுரங்க விரிவாக்க பணி நடைபெறாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் நிலக்கரி சுரங்கங்களில் இருந்து தண்ணீருடன், மழைநீரும் கலந்து அருகில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுக்க என்.எல்.சி சுரங்கத்தில் இருந்து பரவனாற்றுக்கு உபரிநீரை வெளியேற்றுவதற்காக கால்வாய் அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக வளையமாதேவி கிராமத்தில் என்எல்சி நிறுவனம் வடிகால் வாய்க்கால் வெட்டும் பணியை தொடங்கியுள்ளது. இதற்காக வளையமாதேவி கிராமத்தில் நெற் பயிர் விளையும் நிலங்களில் 30க்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரம் மூலம் வடிகால் வாய்கால் வெட்டும் பணியை என்.எல்.சி. நிறுவனம் தொடங்கி உள்ளது. ஆனால் இன்னும் 30 நாட்களில் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெற்பயிர்கள் அழிக்கப்பட்டு, கால்வாய்கள் அமைக்கப்பட்டு வருதாக கூறி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் என்எல்சி விரிவாக்கத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் பாமக, வளையமாதேவி கிராமத்தில் நடந்த சம்பவத்திற்கு பின்னர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகிறது. இந்த சூழலில் என்என்எல்சிக்கு எதிராக நெய்வேலி பகுதியில் கடும் போராட்டங்கள் நடந்து வருகிறது. சிதம்பரம் அருகே சேத்தியாத்தோப்பு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிலர் லாரி டயருக்கு தீ வைத்து கொளுத்தி சாலையில் போட்டுவிட்டு எஸ்கேப் ஆகினர். இதனால் பதற்றமான நிலை ஏற்பட்டது. இதேபோல் நெய்வேலி அருகே கன்னிதோப்பு பாலத்தில் மர்ம நபர்கள் டயரை கொளுத்திச் சென்றிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த இரண்டு சம்பவங்கள் தவிர, பேருந்து மீது கல்வீச்சு சம்பவமும் நடந்துள்ளது. பண்ருட்டியில் இருந்து காடாம்புலியூர் வழியாக சென்ற அரசு விரைவு பஸ் மீது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மீது கல் வீசி தாக்கி உள்ளனர். பேருந்தில் முன் பக்க கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. கொஞ்சி குப்பம் என்ற கிராமத்தில் அருகே இந்த கல்வீச்சு சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவங்களை அடுத்து கடலூர் மாவட்டத்தில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. போலீசார் பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தீ வைப்பு மற்றும் கல் வீச்சு சம்பவங்கள் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.