திமுக நிர்வாகிகளின் சொத்து விவரங்கள் என்று கூறி இரண்டாம் கட்ட கோப்புகளை ஆளுநரிடம் வழங்கிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அது தொடர்பான விடியோவையும் வெளியிட்டுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று மாலை ஆளுநர் ஆர்என் ரவியை நேரில் சந்தித்தார். அப்போது திமுக குடும்பம் 5600 கோடி ரூபாய்க்கு ஊழல் செய்திருப்பதாக கூறி அதற்கான ஆவணங்களை திமுக ஃபைல்ஸ் 2 என்ற பெயரில் பூட்டப்பட்ட இரும்புப் பெட்டியில் வைத்து ஆளுநரிடம் ஒப்படைத்தார்.
இந்நிலையில் திமுக ஃபைல்ஸ் 2 தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அண்ணாமலை. அதில் 5600 கோடி ரூபாய் ஊழல் என்ன என்பது குறித்து கூறியுள்ளார் அண்ணாமலை. அதன்படி 3000 கோடி ரூபாய்க்கு ETL இன்ஃப்ராஸ்ட்ரக்சர் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனம் மோசடி செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். போக்குவரத்து துறையில் 2000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் மெடிக்கல் சர்வீஸ் கார்ப்ரேஷன் நிறுவனத்தின் மூலம் 600 கோடி ரூபாய்க்கு முறைகேடு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு பாதயாத்திரையின் போது இதைப் பற்றி மேலும் விரிவாகக் கூறுவோம் என்றும், ஊழலில் திளைக்கும் திமுக அரசிடம் பதில் கேட்கிறோம் என்றும் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் திமுக ஃபைல்ஸ் 1 என்ற பெயரில் திமுக நிர்வாகிகளின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை. இதற்காக அவர் மீது திமுக தலைவர்கள் அவதூறு வழக்குகள் தொடர்ந்துள்ளனர். நாளை மறுதினம் என் மண் என் மக்கள் என்ற பெயரில் நடை பயணம் தொடங்க உள்ள அண்ணாமலை தற்போது திமுக ஃபைல்ஸ் 2 பட்டியலை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.
அண்ணாமலையின் மற்றொரு பதிவில், ‘இன்று, பாஜக மூத்த தலைவர்களுடன், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியைச் சந்தித்தோம். ஆளுநரிடம், திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக முதல் குடும்பத்துடன் தொடர்புள்ள பினாமி தகவல்கள் அடங்கிய, திமுக ஃபைல்ஸ் பகுதி 2 ஆவணங்களையும், மேலும், ரூ. 5,600 கோடி மதிப்பிலான 3 ஊழல் குறித்த ஆதாரங்களையும் வழங்கி, இது தொடர்பாக அவர் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளோம்’ என்று பதிவிட்டிருந்தார்.