பசும் வயல்களில் இறங்கிய என்.எல்.சி.யின் பொக்லைன் இயந்திரங்கள்!பசும் வயல்களில் இறங்கிய என்.எல்.சி.யின் பொக்லைன் இயந்திரங்கள்!

நெய்வேலி அருகே வளையமாதேவி பகுதியில் விவசாய நிலங்களில் நெல் பயிரிடப்பட்டுள்ள நிலையில், கடும் எதிர்ப்பை மீறி, நெற்பயிரை அழித்து நிலம் கையகப்படுத்தும் பணியை என்.எல்.சி நிர்வாகத்தினர் தொடங்கி இருப்பது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு நிலக்கரி சுரங்கப் பணிகளுக்காக புதிதாக 25,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளும், பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டங்களில் இறங்கினர். என்.எல்.சி விரிவாக்கத்துக்குக் கையகப்படுத்திய நிலங்களுக்கு உரிய இழப்பீடு தர வேண்டும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தரப் பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நிலம் கையகப்படுத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.

இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிக்காக கத்தாழை ,கரிவெட்டி மேல் வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களை என்எல்சி நிர்வாகம் விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்தி இழப்பீடு வழங்கியுள்ளது. இதில் இழப்பீடு முழுமையாக வழங்கவில்லை எனவும், வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வாங்க வேண்டும், மாற்று குடியிருப்பு மற்றும் கடந்த காலங்களில் (2006 முதல் 2013 வரை நிலத்தை கையகப்படுத்தியதற்கு) ரூ.6 லட்சம் வழங்கியவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையின் காரணமாக பல்வேறு பேச்சு வார்த்தைகள் நடைபெற்றது. இதில், ஒரு சில பொதுமககள், விவசாயிகள் மறுத்து வந்தனர். இதனால், அரசியல் கட்சி தலைவர்கள் அவ்வப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சில மாதங்களாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக நேற்று (ஜூலை 25) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம், என்எல்சி நிர்வாகம், விவசாயிகள் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று (ஜூலை.26) காலை வளையமாதேவி பகுதியில் பரவனாறு விரிவாக்கம் வாய்க்கால் வெட்டும் பணிக்காக என்எல்சி இந்தியா நிறுவனம் 30-க்கும் மேற்பட்ட ராட்ச மண் வெட்டும் இயந்திரங்கள் கொண்டு வந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு வாய்க்கால் அணை போடும் பணி நடைபெற்றது. இதில் விளைநிலங்களில் நெல் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் அழிக்கப்பட்டு, அதில் அணைகள் போடப்பட்டன.

விழுப்புரம் சரக டிஐஜி. ஜியாவுல் ஹக், கடலூர் எஸ்.பி ராஜாராமன் ஆகியோர் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும், தண்ணீர் பீச்சி அடிக்கும் இயந்திரம், தீயணைப்பு வாகனம், 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட பாதுகாப்புடன் வாய்க்கால் வெட்டும் பணி நடைபெற்றது. இது குறித்து தகவல் அறிந்து பாமகவினர் 50-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு சேத்தியாதோப்பு குறுக்கு ரோட்டில் சாலை மறியல் செய்ய முயன்றபோது போலீஸார் அவர்களை கைது செய்து சேத்தியாதோப்பு தனியார் மண்டபத்தில் வைத்துள்ளனர். அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்கப் பணிகளுக்காக மேல் வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் விளைந்து நிற்கும் நெற்பயிர்களை அழித்து, ஏழை எளிய மக்களின் நிலங்களை வலுக்கட்டாயமாக அபகரிக்கும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் செயல் வன்மையான கண்டனத்துக்குரியது. தங்கள் நிலம் பறிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் விவசாயிகளை திமுக அரசு காவல்துறையின் மூலம் அடக்குமுறைகளை ஏவி கைது செய்வது அப்பட்டமான எதேச்சதிகாரப்போக்காகும்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தைத் தொடங்குவதற்காகத் தங்கள் நிலங்களை விட்டுக்கொடுத்த நெய்வேலியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பூர்வகுடி தமிழர்கள் தற்போது வெறும் கூலிகளாக மட்டுமே வேலை செய்யக்கூடிய அவலநிலை நிலவுகிறது. அந்தளவுக்கு நெய்வேலி நிறுவனத்தில் வடமாநிலத்தவர் ஆதிக்கம் மேலோங்கி, மண்ணின் மைந்தர்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்படும் கொடுஞ்சூழல் உள்ளது. ஏற்கெனவே நிலம் வழங்கிய குடும்பங்களுக்கு ஒப்பந்தப்படி பணி வழங்காமலும், பல்லாயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணியை நிரந்தரம் செய்யாமலும், தொழிற்பழகுநர் பயிற்சி முடித்த தமிழ் இளைஞர்களுக்குப் பணி வழங்காமலும் தொடர்ந்து இனபாகுபாடு கடைபிடிக்கிறது நெய்வேலி நிலக்கரி நிறுவனம்.

அதுமட்டுமின்றி, 2025-ம் ஆண்டுக்குள் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தைத் தனியாருக்குத் தாரைவார்க்கவும் மோடி அரசு திட்டமிட்டுள்ளது. விரைவில் தனியாருக்குத் தாரைவார்க்கப் போகும் நிறுவனத்துக்கு தமிழ் மக்களின் நிலங்களை அடிமாட்டு விலைக்கு ஒப்படைக்க தமிழக அரசு துணைபோவது ஏன்? நெய்வேலி நிறுவனத்தில் பறிபோகும் தமிழர்களின் உரிமையைப் பெற்றுக்கொடுக்க எவ்வித முயற்சியும் எடுக்காத திமுக அரசு, தமிழர் நிலங்களை மட்டும் பறித்துக்கொடுக்க முனைப்புக் காட்டுவது தமிழ் மக்களுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும். ஏற்கெனவே நிலக்கரி எடுப்பதற்காக தமிழர்களிடம் பறிக்கப்பட்ட 1000 ஏக்கர் நிலங்கள் இன்னும் பயன்படுத்தாது இருப்பில் உள்ள நிலையில், மேலும், மேலும் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை வலுக்கட்டாயமாக எதற்குப் பறிக்க வேண்டும்?

நிலத்துக்கு உரிய இழப்பீடும், நிலம் வழங்கும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்ற பூர்வகுடி தமிழர்களின் கோரிக்கையை ஏற்க மறுக்கும் நெய்வேலி நிறுவனத்துக்கு, நிலங்களை அளிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது எவ்வகையில் நியாயமாகும்? பொதுத்துறை நிறுவனமாக இருக்கும்போதே உரிய இழப்பீடும், நிரந்தரப் பணியும் வழங்க மறுக்கும் நிலையில், விரைவில் தனியார் மயமாகப்போகும் நிறுவனத்தை நம்பி தமிழர்கள் தங்கள் நிலங்களை எவ்வாறு ஒப்படைக்க முடியும்? நிலங்களை வழங்க மறுக்கும் விவசாயிகளை மிரட்டி திமுக அரசு அச்சுறுத்துவதும், கைது செய்து சிறைபடுத்துவதும் கொடுங்கோன்மையின் உச்சமாகும்.

ஆகவே, விவசாயிகளின் கடும் எதிர்ப்பினையும் மீறி, சிறிதும் மனச்சான்று இன்றி விளைந்த பயிர்களை அழித்து, விளைநிலங்களில் இரண்டாவது சுரங்கப்பணிகளைத் தொடங்கியுள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் அத்துமீறலை இந்திய ஒன்றிய மற்றும் தமிழக அரசுகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். மேலும், நிலங்களைத் தர மறுக்கும் விவசாயிகளை கைது செய்யும் போக்கினை திமுக அரசு கைவிடுவதோடு, தனியார் மயமாகவிருக்கும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் வலுக்கட்டாயமாக தமிழ் மக்களின் நிலங்களை அபகரிப்பதற்குத் துணைபோவதையும் கைவிட வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, கடலூர் மாவட்டம் நெய்வேலியில், என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிகள் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் புதன்கிழமை கால்வாய் அமைக்கும் பணிகள் தொடங்கியது. இந்த பணிகளுக்காக 30-க்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்களின் துணையுடன் விளைநிலங்களில் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இன்னும் இரண்டு மாதத்தில் அறுவடைக்கு தயாராக நெற்பயிர்கள் உள்ள விளைநிலங்களை அழிப்பதற்கு அப்பகுதி விவசாயிகள் கடும் தெரிவித்தனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியது. அசம்பாவிதங்களைத் தவிர்க்க அங்கு ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். என்எல்சியின் இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.