அமைச்சர் பொன்முடிக்கு லஞ்ச பணத்தை எண்ணவே நேரம் பத்தாது என தமிழக பாஜக மூத்த நிர்வாகி எச்.ராஜா கூறியுள்ளார்.
தமிழக பாஜக மூத்த நிர்வாகிகளில் ஒருவர் எச்.ராஜா அடிக்கடி அதிரடியான கருத்துக்களை கூறி பேசு பொருளாகி வருகிறார். எச்.ராஜாவின் சில கருத்துக்கள் சர்ச்சையாவதும் உண்டு. சமீப காலமாக முதல்வர் ஸ்டாலின் முதல் நிர்வாகிகள் பலரையும் சரமாரியாக விளாசி வருகிறார் எச்.ராஜா. குறிப்பாக செந்தில் பாலாஜி விவகாரத்தில், முதல்வர் ஸ்டாலின் அவரை காப்பாற்ற முயற்சிப்பதாக பகீரங்கமாக குற்றம் சாட்டிய எச்.ராஜா, செந்தில் பாலாஜியை சிறைக் கைதி என்று வார்த்தைக்கு வார்த்தை விமர்சித்து வந்தார்.
பாஜகவை எதிர்க்கும் கட்சிகளை கிடைக்கும் கேப்பில் எல்லாம் வச்சு செய்து வருகிறார் எச்.ராஜா. அந்த வகையில் திருமாவளவனையும் சாடினார் எச்.ராஜா. புதுக்கோட்டை வேங்கை வயல் சம்பவத்திற்காக குரல் கொடுக்காத திருமாவளவன் மணிப்பூர் கலவரத்துக்காக போராட்டம் நடத்துவது நீலிக்கண்ணீர் என்று சாடினார்.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் நடைபெற்ற நவம்பர், டிசம்பர், மாத செமஸ்டர் தேர்வுகளின் முடிவில் 26 கல்லூரிகளில் ஒற்றை இலக்க எண்ணிக்கையில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருப்பதாகவும் 10 கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்று வெளியான செய்தியை தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் எச்.ராஜா. மேலும் இந்த செய்திக்கு கேப்ஷனாக, உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை சீண்டி பதிவிட்டுள்ளார். அதாவது, இந்த அழகுல நம்பர் 1 முதல்வராம். தானே சொல்லிக்கொள்கிறார். உயர் கல்வித்துறை அமைச்சருக்கு தன் லஞ்சப் பணத்தை எண்ணவே நேரம் பத்தாது. இதுபற்றி எங்க கவனிக்க போறார்.. என நக்கலடித்துள்ளார்.
உயர்க்கல்வித்துறை அமைச்சராக உள்ள பொன்முடி மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த வாரம் அதிரடி சோதனை நடத்தினர். இதில் அவர் வீட்டில் இருந்து வெளிநாட்டு டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனிடம் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் அவருக்கு லஞ்ச பணத்தை எண்ணவே நேரம் பத்தாது என சாடியிருக்கிறார் எச்.ராஜா.