திருச்சியில் நடைபெற்ற வேளாண் சங்கமம் விழாவில், விவசாயிகளுக்கு 50,000 கூடுதல் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்து, 12 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகளுக்கான ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ‘வேளாண் சங்கமம் 2023’ என்ற தலைப்பில் வேளாண் கண்காட்சி திருச்சி கேர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் இன்று துவங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இன்று முதலமைச்சர் வேளாண் கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து, பாரம்பரிய நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு விருதுகளை வழங்கினார். மேலும், 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்து, 12 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகளுக்கான ஆணைகளை வழங்கினார். தொடர்ந்து இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது:-
இந்த பயிர்கள் அனைத்தையும் பார்க்கும் போது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது. அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தற்போது வேளாண் மகனாக மாறியுள்ளார். மற்ற துறைகளை வளர்க்க நிதிவளம் இருந்தால் போதும். ஆனால் வேளாண் துறைக்கு நீர்வளமும் அவசியம். நமது ஆட்சியில் நீர் வளமும் கை கொடுத்துள்ளது. திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுத்தோம். அதற்கு பின்னர் 50 ஆயிரம் பேருக்கு மின் இணைப்புகளை வழங்கினோம். தற்போது மீண்டும் 50 ஆயிரம் பேருக்கு வழங்குகிறோம். 10 வருடமாக நடந்த அதிமுக ஆட்சியில் 2.20 லட்சம் விவசாய மின் இணைப்பு மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால் 2 ஆண்டுகளில் 2 லட்சம் பேருக்கு விவசாய மின் இணைப்பை வழங்கி உள்ளோம். நாம் சொல்வதை செய்வோம்,சொல்லாததையும் செய்வோம். விவசாயத்தை தெரிந்து
இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் வேளாண்மையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் முக்கியமாக இந்த கண்காட்சியை பார்வையிட வேண்டும். வேளாண்மை என்பது வாழ்க்கை மற்றும் பண்பாடாக மட்டுமே உள்ளது. ஆனால் அவர்கள் லாபம் அடைய வேண்டும். வேளாண் துறை விரும்பி வரக் கூடிய துறையாக மாற வேண்டும். விவசாயிகளுக்கு மூலதனம் மற்றும் கடன் உதவி வழங்கப்படுகிறது. வேளாண் துறை வர்த்தக துறையாக மாற வேண்டும். இந்த கண்காட்சியை அனைத்து மாவட்டத்திற்கும் எடுத்துச் செல்லுங்கள். குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டத்திற்கான காலக்கெடு ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்டுகிறது. அதே போல் திட்டத்திற்கான நிதி 75 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.