தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாளை பாதயாத்திரை தொடங்க உள்ள நிலையில் அதுபற்றி தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ஒருவேளை உடலை சீராக வைத்துக் கொள்வதற்காக மருத்துவர்களின் ஆலோசனைப்படி இந்த நடைபயணத்தை மேற்கொள்கிறாரோ என்னவோ தெரியவில்லை என்று கூறினார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. அந்த வகையில், நாடாளுமன்ற தேர்தலுக்குள் கட்சியை பலப்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் அண்ணாமலை தொடங்க இருக்கும் இந்த பாதயாத்திரை நாளை ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்குகிறது. அண்ணாமலையின் இந்த பாத யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்க உள்ளார். முதல் கட்டமாக ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளில் நடைபெறுகிறது. நாளைமுதல் (வரும் 28-ந்தேதி) ஆகஸ்டு 22-ந்தேதி வரை நடக்கிறது. 5 கட்டங்களாக நடைபெறும் அண்ணாமலையின் பாதயாத்திரை ஜனவரி மாதம் சென்னையில் நிறைவு பெறுகிறது. மொத்தம் 100 நாட்கள் அண்ணாமலையின் பாத யாத்திரை நடக்கிறது. இந்த பாதயாத்திரையின் போது புகார் பெட்டி ஒன்றும் கொண்டு செல்லப்படுகிறது. பொதுமக்கள் புகார்களை அந்த பெட்டியில் போடலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
234 தொகுதிகளிலும் நடைபெறும் அண்ணாமலையின் பாதயாத்திரையின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. அண்ணாமலையின் பாதயாத்திரைக்காக பிரத்யேக வாகனமும் தயராகி உள்ளது. அண்ணாமலை தனது நடைபயணத்தில் தமிழகத்தில் ஆளும் திமுகவை கடுமையாக விமர்சிப்பார் எனத் தெரிகிறது. தனது நடைபயணம் முழுவதுமே திமுக குறித்த விமர்சனங்களைதான் அண்ணாமலை அதிகம் வைக்கக் கூடும் என்பதுதான் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக உள்ளது.
இந்த நிலையில் தான், அண்ணமாலை நடைபயணம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் சேகர் பாபு, அவருக்கு மருத்துவர் ஆலோசனை கொடுத்து இருக்கலாம் அதனால் நடக்கிறார் என்று கலாய்க்கும் வகையில் பதிலளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சேகர் பாபு கூறியதாவது:-
அண்ணாமலை கொடுத்த பெட்டியை ஆளுநர் திறந்து பார்த்தாரா இல்லையா? என்பதை அவரைத்தான் கேட்க வேண்டும். அண்ணாமலை கூறிய புகார்கள் எவை எவை என்று தெரிந்த பிறகு அதற்கு உரிய பதில் அளிக்கப்படும் என்று எங்கள் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி கூறியுள்ளார். எங்களுக்கு மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயம் இல்லை. பார்ட் 2 அல்ல பார்ட் 10 வரை போனால் கூட வருத்தப்படுவதற்கோ கவலைப்படுவதற்கோ ஒன்றும் இல்லை. டிரங்க் பெட்டியில் என்ன இருந்தது என்பதை கொடுத்தவரையும் பெற்றுக்கொண்டவரையும் நீங்கள் தான் கேள்வி கேட்க வேண்டும்.
அண்ணாமலை நாளை நடைபயணம் தொடங்க இருப்பது குறித்து கேட்கிறீர்கள், ஒருவேளை உடலை சீராக வைத்துக் கொள்வதற்காக மருத்துவர்களின் ஆலோசனைப்படி இந்த நடைபயணத்தை மேற்கொள்கிறாரோ என்னவோ தெரியவில்லை. நடைபயணம் மட்டும் இல்லை, எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தை பொருத்த அளவில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் அமையும் கூட்டணிதான் 40 நாடாளுமன்ற தொகுதியிலும் வெற்றி பெறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அண்ணாமலையின் நடைபயணத்திற்கு வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறினார்.