அவையில் பேசாத ஒரு விநோதமான பிரதமரை இந்தியா முதன்முறையாகப் பார்க்கிறது என்று திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன் கூறியுள்ளார்.
மணிப்பூர் கலவரம் தொடர்பாக நாடாளுமன்றம் வரலாறு காணாத வகையில் முடங்கி உள்ளது. எதிர்க்கட்சிகள் இந்தக் கலவரம் தொடர்பாகப் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அதற்கான எந்த அறிகுறியும் கண்ணுக்கு எட்டிய தொலைவில் தென்படவில்லை.
இந்நிலையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன் கூறியதாவது:-
மணிப்பூரில் நடப்பது ஒரு கொடூர சம்பவம் என்றால், அதைவிடக் கொடூரம் மோடியின் மவுனம். அவர் நாடாளுமன்றத்தில் மணிப்பூரைப் பற்றிப் பேச மறுக்கிறார். மிகச் சில நிமிடங்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே பேசினார். ஆக, மோடியை மணிப்பூர் பற்றிப் பேச வைப்பதற்கே நான் இவ்வளவு பிடிவாதம் பிடிக்க வேண்டி இருக்கிறது. இந்தியாவில் உள்ள மிகச் சிறந்த வரலாற்று ஆசிரியர்களில் ஒருவரான ராமச்சந்திர குஹா, “மணிப்பூரில் நடப்பது கொடூரம் என்றால், மோடியிடம் நாம் காண்பது கோழைத்தனம்” என்று மிக வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை எதிர்கொள்ள முடியாத, ஒரு கோழைத்தனம் உள்ளவரை நாம் பிரதமராகப் பெற்று இருக்கிறோம் என்றும் அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
நானும் சொல்கிறேன், இது ஒருவிதமான கோழைத்தனம்தான். இந்த விவகாரத்தை எதிர்கொள்வதற்கே துணிச்சல் இல்லாத ஒருவரை நாம் பிரதமராகப் பெற்றிருக்கிறோம் என்பது வருத்தத்திற்கு உரியது. எனவே நாடாளுமன்றம் இதைப்பற்றி விவாதிக்கத் தயாராக இல்லை என்றால் நாடாளுமன்றம் அதற்குரிய தகுதியை இழந்துவிட்டது என்றே பொருள். ப.சிதம்பரம் உட்படப் பல மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதைத் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகிறார்கள். அனைத்து நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களும் சபாநாயகருக்கு அருகில் வந்து முழக்கம் இடுகிறார்கள்.ஆனால், அமித்ஷா நாங்கள் விவாதிக்கத் தயாராக இருக்கிறோம் என்கிறார். பாஜக தானாகவே முன்வந்து இதை விவாதித்திருக்க வேண்டும் என்பதுதானே எதிர்க்கட்சிகளின் கோரிக்கை. இவ்வளவு வலியுறுத்தியும் விவாதிக்கவில்லை. இதை நாட்டிற்கே அவமானம் என்றே சொல்ல வேண்டும்.
முன்னாள் பிரதமர் நேரு மணிப்பூரை, ‘இது ஒரு சுவிட்சர்லாந்த்’ என்று சொல்லுவார். அப்படி இந்தியாவின் சுவிட்சர்லாந்தாக இருந்த மாநிலம் எரிக்கப்பட்டுவிட்டு, சிதைக்கப்பட்டு உள்ளது. நாம் ‘திராவிட மாடல்’ என்போம். அவர்கள் பதிலுக்கு ‘குஜராத் மாடல்’ என்பார்கள். ஆனால், உண்மையில் ‘மணிப்பூர் மாடல்’தான் நம் கண்முன்னே நேரடி சாட்சியாக இருக்கிறது. மணிப்பூர் விவகாரத்தைப் பேசவேண்டியவர் பிரதமர்தான். இதை உள்துறை அமைச்சர் பேசி முடித்துவிடலாம் என்றால், உள்துறை அமைச்சரே பிரதமராக ஆகிவிடலாம். பிறகு எதற்குப் பிரதமர்? மவுனம் என்பது என்பது சில இடங்களில் தேவையாக இருக்கலாம். ஒட்டுமொத்தமாக நாடு சிதைந்துகொண்டிருக்கிறபோது பிரதமர் மவுனமாக இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகவே அமையும். பிரதமரைப் பேசச் சொன்னாலே நாடாளுமன்றம் முடங்கிவிடும் என்றால், பிறகு எதற்கு நாடாளுமன்றம்? பேசாமல் அதை மூடிவிட்டுப் போய்விடலாம். பின் எதற்காக புதிய நாடாளுமன்ற கட்டடம்? அவையில் பேசவே பேசாத பிரதமருக்கு நாடாளுமன்றம் புதிய கட்டடத்திலிருந்தால் என்ன? பழைய கட்டடத்திலிருந்தால் என்ன? பிறகு எதற்காக அதைக் கட்ட வேண்டும்? எதில் தான் அவர் பேசி இருக்கிறார். அவர் பொது மேடைகளில் அலங்காரமாகப் பேசுகிறார். வெளிநாடுகளுக்குப் போய் பேசுகிறார். இந்தியாவில்கூட பிற இடங்களில் பேசுவார். ஆனால், பேச வேண்டிய நாடாளுமன்றத்தில் பேச மாட்டார். இப்படி ஒரு விநோதமான பிரதமரை இந்தியா முதன்முறையாகப் பார்க்கிறது. ‘சற்று தாமதம் ஆகிவிட்டால்கூட பதறிப்போய் அடித்துப் பிடித்துக் கொண்டு நேரு நாடாளுமன்றத்திற்கு ஓடிவருவார்’ என்று நான் புத்தகங்களில் படித்திருக்கிறேன். ஆனால், மோடி எங்கு வேண்டுமானாலும் பேசுவேன். நாடாளுமன்றத்தில் மட்டும் பேச மாட்டேன் என்கிறார். இது நாட்டுக்கே அவமானம். இவ்வாறு அவர் கூறினார்.