தமிழக அமைச்சர்கள் 6 பேரின் பினாமிகள் மற்றும் அவர்களின் சொத்துப் பட்டியல் உள்ளன. அந்த 6 அமைச்சர்களின் பெயர்களை வெளியிடுவதை விட அவர்களின் பினாமிகள் மீது நடவடிக்கை எடுத்தால் தமிழகம் ஊழல் இல்லாத மாநிலமாக மாறும் என்று அண்ணாமலை கூறினார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ராமேஸ்வரத்தில் ‘என் மண், என் மக்கள்’ யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை தொடங்கி வைக்கிறார். நாளை தொடக்க விழா மட்டுமே நடைபெறும். ஜூலை 29-ல் யாத்திரை தொடங்கும். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிக்கும் யாத்திரை செல்லவுள்ளது. நாளை முதல் ஆகஸ்ட் 22 வரை நடைபெறும் முதல் கட்ட யாத்திரைக்கு பாஜக மூத்த தலைவர்கள் யாத்திரைக்கு தலைமை வகிப்பார்கள். முதல் கட்ட யாத்திரைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை வகிக்கிறார். மொத்தம் 5 கட்டங்களாக 168 நாட்கள் யாத்திரை நடைபெறும். மக்கள் வசிக்கும் பகுதிகளில் கால்நடையாகவும், மக்கள் வசிக்காத பகுதிகளில் வாகன யாத்திரையும் நடைபெறும். 1700 கிலோ மீட்டர் கால்நடையாகவும், 900 கிலோ மீட்டர் வாகனத்திலும் யாத்திரை நடைபெறும். ஜன.11-க்குள் முன்பு யாத்திரை முடிக்கப்படும். யாத்திரை நிறைவு நாள் பிரமாண்டமாக நடத்தப்படும்.
யாத்திரை தொடக்க விழாவுக்கு கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருகை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அவர் சேலத்தில் மருத்துவ சிகிச்சையில் உள்ளார்.
மோடியை 3-வது முறையாக பிரதமராக்க தமிழக மக்களின் ஆதரவை பெறும் நோக்கத்தில் இந்த யாத்திரை நடத்தப்படுகிறது. யாத்திரை தொடக்க விழாவில் மோடி என்ன செய்தார் என்ற புத்தகம் வெளியிடப்படும். சட்டசபை தொகுதி வாரியாக நிறைவேற்றப்பட்ட மத்திய அரசின் திட்டங்கள் குறித்த கையேடும் வெளியிடப்படும். இந்த யாத்திரை 3-வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்க நிச்சயம் துணைபுரியும். 10 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்தப்படும். இதில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
நெய்வேலி என்எல்சி விரிவாக்கத்துக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தும்போது, அறுவடைக்கு தயாராக இருக்கும் நெற்பயிர்களை அழித்து நிலங்களை கையகப்படுத்துவதை ஏற்க முடியாது. இதற்காக என்எல்சி அதிகாரியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பாஜக சார்பில் கண்டனத்தை பதிவு செய்துள்ளேன். என்எல்சி விரிவாக்கத்தை நிறுத்த முடியாது. விரிவாக்கத்தால் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதேநேரத்தில் சட்டத்தில் கூறப்பட்டுள்ள முறைப்படி நிலங்களை கையகப்படுத்த வேண்டும். கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். நிலம் வழங்கியவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். இதுதான் ஆக்கபூர்வமான தீர்வாக இருக்கும். இதை அரசியலாக்குவதால் தீர்வு கிடைக்காது.
திமுகவினரின் 2-வது சொத்து பட்டியல் ஆளுநரிடம் அளிக்கப்பட்டுள்ளது. அப்போது ஆளுநரிடம் அளித்த இரும்புப் பெட்டியில் தமிழக அமைச்சர்கள் 6 பேரின் பினாமிகள் மற்றும் அவர்களின் சொத்துப் பட்டியல் உள்ளன. அந்த 6 அமைச்சர்களின் பெயர்களை வெளியிடுவதை விட அவர்களின் பினாமிகள் மீது நடவடிக்கை எடுத்தால் தமிழகம் ஊழல் இல்லாத மாநிலமாக மாறும். நாங்கள் ஆளுநரை நம்புகிறோம். அவர் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார். லஞ்ச ஒழிப்பு துறையிடம் ஏற்கெனவே பாஜக சார்பில் திமுக அரசின் மீது 6 ஊழல் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. இப்போது தெரிவிக்கப்பட்டுள்ள 3 ஊழல் தொடர்பாகவும் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளிக்கப்படும்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொட்டுப்பார், சீண்டிப்பார் என பேசியதற்கு, அவரை குறை சொல்ல முடியாது. அவருக்கு பேச்சு எழுதிக் கொடுப்பவரைதான் குறை சொல்ல வேண்டும். அமைச்சர் பொன்முடி ரூ.40 கோடிக்கு மேல் வைப்பு நிதி மற்றும் வெளிநாட்டு பணம் வைத்திருப்பதாக அமலாக்கத் துறை சொல்லியுள்ளது. இதற்கு முதல்வர் விளக்கம் அளித்திருக்க வேண்டும். அதற்கு துணிவு இல்லாமல் யாரோ எழுதி கொடுத்ததை வைத்து சீண்டிப்பார், தொட்டுப்பார் என பேசுவது முதல்வர் பதவிக்கு அழகல்ல. அமலாக்கத் துறை உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகளின் நடவடிக்கையால் திமுகவினர் கோபத்தை பாஜகவினர் மீது தான் திருப்புவார்கள். பாஜகவினரை கைது செய்வார்கள். அதை எதிர்கொள்ள பாஜக தயாராக இருக்கிறது. அதற்காக ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை பாஜக கைவிடாது.
மணிப்பூரில் 2 பழங்குடியினர் இடையே சண்டை நடைபெறுகிறது. இதற்கான தீர்வு மணிப்பூருக்குள்தான் இருக்கிறது. மணிப்பூருக்கு வெளியே இருந்து தீர்வு காண முடியாது. அதை மணிப்பூர் மக்கள் ஏற்கவும் மாட்டார்கள். மணிப்பூரில் விரைவில் அமைதி திரும்பும். மணிப்பூர் விவகாரத்துக்கு நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளிப்பார். இதில் எதிர்கட்சிகள் அரசியல் செய்வது நல்லது அல்ல. திமுகஃ பைல்ஸ் போல் அதிமுக ஃபைல்ஸ் எப்போது வெளியிடப்படும் என்பது தொடர்பாக வருங்காலத்தில் பேசுவோம். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.