எதிர்கட்சிகளின் கூட்டணியான ‘இண்டியா’ சார்பில் எம்.பி.க்கள் குழு இரண்டு நாள் பயணமாக நாளை மறுநாள் (ஜூலை 29) மணிப்பூர் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும், நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் போராடி வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி இதுவரை நாடாளுமன்றத்துக்கு வந்து விளக்கம் அளிக்காததால், அவரை விளக்கம் அளிக்க வலியுறுத்தும் விதமாக மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. நோட்டீசை ஏற்றுக்கொண்ட சபாநாயகர், நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களவையில் எப்போது எடுத்துக்கொள்ளலாம் என்பது குறித்து ஆலோசித்து அறிவிப்பதாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மணிப்பூர் மக்களைச் சந்திக்கும் நோக்கில் ‘இண்டியா’ கூட்டணி எம்.பி.க்கள் நாளை மறுநாள் அம்மாநிலம் செல்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் அவர்கள் மணிப்பூரில் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் விவகாரம் காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்றும் அமளி ஏற்பட்டு அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று எதிர்க்கட்சி எம்.பி.கள் கருப்பு உடை அணிந்து வந்தனர். மணிப்பூர் சம்பவத்தை கண்டிக்கும் விதமாக அவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மாநிலங்களவையைப் பொருத்தவரை எதிர்க்கட்சிகளின் அமளி மற்றும் அவர்களுக்கு எதிராக ஆளுங்கட்சி உறுப்பினர்களின் முழக்கம் காரணமாக கூச்சல் குழப்பம் நிலவியது. இதன் காரணமாக முதலில் 12 மணி வரையிலும், அதன்பின்னர் பிற்பகல் 2 மணி வரையிலும் அவை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்கு அவை கூடியபோதும் அமளி நீடித்தது. இந்த அமளிக்கு மத்தியில் ஒளிப்பதிவு (திருத்தம்) மசோதாதாவை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் கொண்டு வந்தார். மசோதா மீது விவாதம் நடந்துகொண்டிருந்தபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.