மணிப்பூர் கலவரம் தொடர்பாக இதுவரை 6 வழக்குகள் சி.பி.ஐ. இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விசாரணை அனைத்தும் யாருக்கும் சாதகமாக அமைந்துவிடக்கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. புதுடெல்லி:
மணிப்பூரில் கடந்த மே மாதம் மைதேயி இனத்தவருக்கும் குகி இனத்தவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 150-க்கும் மேற்பட்டவர்கள் பலியானர்கள். சுமார் 40 ஆயிரம் பேர் உடமைகளை இழந்து முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். மணிப்பூரில் ஏற்பட்ட கலவரம் இன்று வரை நீடித்து வருகிறது. இந்த நிலையில் மே மாதம் 4-ந்தேதி குகி இனத்தை சேர்ந்த 2 பழங்குடியின பெண்கள் ஆடைகள் இன்றி ஊர்வலகமாக அழைத்து செல்லப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி நாட்டையே உலுக்கியது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த முடியாத நிலை நிலவுகிறது.
இதற்கிடையே 2 பெண்கள் தொடர்பான வீடியோ காட்சிகள் விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு தாமாக எடுத்துக்கொண்டு விசாரணை நடத்தி வருகிறது. நேற்று நடந்த விசாரணையின்போது, மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. மேலும் இது தொடர்பான வழக்கை மணிப்பூரில் இருந்து வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மணிப்பூரில் மே 4-ந்தேதி குகி இனத்தை சேர்ந்த 2 பெண்கள் ஆடைகள் இன்றி ஊர்வலமாக அழைத்து செல்லப்படும் காட்சியை வீடியோவாக பதிவு செய்த நபர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவர் மைதேயி இனத்தை சேர்ந்தவர் ஆவார். அவர் வீடியோவாக பதிவு செய்த காட்சிகள் அடங்கிய செல்போன் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கைது செய்யப்பட்டுள்ள அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரது செல்போன் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அந்த விசாரணைகளில் என்னென்ன நடந்தது என்பது தெரிய தொடங்கி இருக்கிறது.
குகி இனப் பெண்கள் ஆடைகள் இன்றி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட காட்சியை பதிவு செய்தவர்கள் அதை ரகசியமாக வைத்திருந்துள்ளனர். பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு 2 நாட்கள் முன்பு அந்த வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் மிகப்பெரிய சதித் திட்டம் இருப்பது முதல் கட்ட விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. திட்டமிட்டு அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்பதற்காகவே அந்த வீடியோ காட்சி வெளியிடப்பட்டுள்ளது. பாராளுமன்றம் நடக்கும் நேரத்தில் பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டிருக்கிறது.
மணிப்பூர் கலவரம் தொடர்பாக இதுவரை 6 வழக்குகள் சி.பி.ஐ. இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு வழக்கு ஒப்படைக்கப்பட இருக்கிறது. இந்த 7 வழக்குகள் விசாரணை பாரபட்சமின்றி நடத்தப்படும். விசாரணை முடிவில் நிச்சயம் உண்மை தெரியும். விசாரணை அனைத்தும் யாருக்கும் சாதகமாக அமைந்துவிடக்கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. எனவேதான் மணிப்பூரில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம். சி.பி.ஐ. விசாரிப்பது போல மணிப்பூர் கலவரத்தின் 3 வழக்குகள் தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் கலவரம் தொடர்பான காட்சிகள் திட்டமிட்டு பரப்பப்பட்டு இருப்பதால் பாராளுமன்றத்தை தொடர்ந்து முடக்குகிறார்கள். மேலும் மணிப்பூர் மாநில அரசு செயல் இழந்துவிட்டதாக சொல்கிறார்கள். ஆனால் மே 4-ந்தேதி 2 பழங்குடியின பெண்கள் ஆடைகள் இன்றி அழைத்து செல்லப்பட்டபோது அங்கு ராணுவமோ, உள்ளூர் போலீசாரோ இல்லை. சம்பவம் குறித்து தெரிய வந்த பிறகே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மணிப்பூரில் மைதேயி இனத்தவருக்கும், குகி இனத்தவருக்கும் இடையே சமரசம் செய்து கொள்வதற்கு இதுவரை 12 தடவைக்கு மேல் பேச்சுவார்த்தை நடந்தது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். இரு இனத்தவர்களின் வாழ்விடங்களுக்கு இடையே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சமரச முயற்சிகள் செய்யப்பட்டு உள்ளன. அவர் ஒவ்வொரு நாளும் மணிப்பூர் சட்டம் ஒழுங்கை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறார். மணிப்பூரில் நாங்கள் முழுமையாக அமைதி ஏற்படுத்தி வருகிறோம். 16 மாவட்டங்களில் தலா ஒரு படை வீதம் 16 படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. கலவரத்தை அவர்கள் முழுமையாக கட்டுப்படுத்தி உள்ளனர்.
மணிப்பூரில் 72 சதவீதம் அரசு ஊழியர்கள் இடையூறு இல்லாமல் பணியாற்றி வருகிறார்கள். 82 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு திரும்பி உள்ளனர். சமீபத்தில் கூட மத்திய, மாநில சிவில் சர்வீஸ் தேர்வுகள் திட்டமிட்டபடி அமைதியாக நடந்தன. 90 சதவீதம் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது. விரைவில் மணிப்பூர் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. மணிப்பூரில் வன்முறை ஏற்படுவதற்கு அம்மாநில ஐகோர்ட்டில் வழங்கப்பட்ட மைதேயி இனத்தவருக்கு பழங்குடியின அந்தஸ்து கொடுக்கலாம் என்ற தீர்ப்புதான் காரணமாகி விட்டது. இது தொடர்பாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்யும். மேலும் மணிப்பூரில் நாங்கள் ஆயுத சட்டத்தை திரும்ப பெறவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
மியான்மரில் இருந்து மணிப்பூருக்கு வருபவர்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறார்கள். வருகிற டிசம்பர் மாதம் இது தொடர்பான பட்டியல் வெளியிடப்படும். பட்டியலில் இல்லாதவர்கள் இந்திய குடியுரிமை அடையாள அட்டை பெற இயலாது. மணிப்பூரில் ஏற்பட்ட கலவரம் பா.ஜனதா ஆட்சியில் மட்டும் நடப்பது போல காங்கிரசார் பிரசாரம் செய்கிறார்கள். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது 1993, 1995, 1997, 1998 ஆண்டுகளில் 4 தடவை மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. அப்போது கலவரங்கள் தொடர்பாக மத்திய ராஜாங்க மந்திரி ராஜேஷ் பைலட் விளக்கம் அளித்தார். மணிப்பூர் எம்.பி. ஒருவர் பிரதமர் இதில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த போது, அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் சபையை விட்டே வெளிநடப்பு செய்தார். ஆனால் நாங்கள் அப்படி நடந்து கொள்ளவில்லை. பாராளுமன்றத்தில் முழுமையாக விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறோம். ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் அதை கேட்பதற்கு முன் வருவது இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் மணிப்பூரில் கலவரம் ஏற்பட்டபோது 14 நாட்கள் கழித்துதான் துணை நிலை ராணுவத்தை அனுப்பி வைத்தார்கள். ஆனால் நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மணிப்பூர் குழுக்களை இரும்பு கரம் கொண்டு அடக்கி இருக்கிறோம். இதன் மூலம் வன்முறை மற்ற மாவட்டங்களுக்கும் மற்ற மாநிலங்களுக்கும் பரவுவதை தடுத்து நிறுத்தி இருக்கிறோம்.
காங்கிரஸ் ஆட்சியின் போது மணிப்பூரில் கலவரம் ஏற்பட்ட போது 149 நாட்கள் தொடர்ந்து அந்த மாநிலத்துக்குள் யாரும் செல்ல முடியவில்லை. அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்ல முடியவில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் 240 ரூபாய்க்கும், கியாஸ் சிலிண்டர் ரூ.1900-த்துக்கும் விற்பனை ஆனது. ஆனால் நாங்கள் அத்தியாவசிய பணிகள் அனைத்தையும் சீராக வைத்திருக்கிறோம். மணிப்பூருக்கு இப்போதும் யாரும் சென்று வரலாம் என்ற நிலையை உருவாக்கி வைத்திருக்கிறோம். ராகுல்காந்தி சென்ற போது ஹெலிகாப்டரில் செல்ல அறிவுறுத்தப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட சில இடங்களில் வாகனத்தில் செல்வது சரியாக இருக்காது என்று சொல்லப்பட்டதால் அவர் தடுக்கப்பட்டார். அது அவருக்கே தெரியும். தற்போது மணிப்பூர் இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கிறது. விரைவில் பிரச்சினைகள் தீர்க்கப்படும். இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.