கரூரில் ஐ.டி அதிகாரிகளை தாக்கியவர்களுக்கு ஜாமீனை ரத்து செய்தது ஐகோர்ட்!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி அசோக்கின் வீட்டில் சோதனை நடத்தச் சென்ற வருமான வரித்துறையினர் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பான வழக்கில் முன் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், ஜாமீனை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீடு, அலுவலகங்கள், மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் சில வாரங்களுக்கு முன்பு வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. சென்னை, கோவை, கரூர் மாவட்டங்களில் இந்த சோதனைகள் நடைபெற்றன. கரூரில் சோதனை நடத்த திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் வீட்டில் சோதனை நடத்தச் சென்ற வருமான வரி அதிகாரிகளை தடுத்து நிறுத்தி திமுகவினர் வாக்குவாதம் செய்தனர். ஐடி கார்டை காட்டும்படி, அவர்கள் வைத்திருந்த பையை திறந்து காட்டும்படியும் கூறினர். அதோடு அதிகாரிகள் வந்த கார் கண்ணாடியை உடைத்தனர். இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் எஸ்பி அலுவலகம் சென்று தஞ்சமடைந்தனர். அதன்பிறகு போலீஸ் பாதுகாப்புடன் வருமான வரித்துறை சோதனை நடந்தது. மேலும் இந்த சம்பவத்தில் 4 அதிகாரிகள் காயமடைந்தனர்.

இதுதொடர்பாக வருமான வரித்துறையினர் அளித்த புகாரின் பேரில் கரூர் நகர் காவல் நிலையத்தில் 3, தாந்தோணிமலையில் ஒன்று என 4 வழக்குகள் பதிவாகி இருந்தது. இந்த சோதனையின் போது வருமான வரி அதிகாரிகளை தாக்கியதாக 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடையவர்களுக்கு ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் வழங்கி கரூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து, அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்கியவர்கள் மீதான வழக்கில் ஜாமீன், முன்ஜாமீன் அளித்தது ஏற்புடையதல்ல என்று சென்னை வருமான வரித்துறை அதிகாரிகள் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை, 19 பேருக்கும் அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. ஜாமீன் ரத்து செய்யப்பட்ட 19 பேரும் 3 நாட்களில் கரூர் நீதிமன்றத்தில் சரண் அடையவும் உத்தரவிட்டுள்ளது ஐகோர்ட் கிளை.