கடலூரில் என்எல்சி விரிவாக்க பணிகள் தற்காலிக நிறுத்தம்!

பாமக சார்பில் இன்று போராட்டம் நடைபெற உள்ள நிலையில் கடலூர் மாவட்டம் என்எல்சி நிலக்கரி சுரங்க விரிவாக்க பணிக்காக வளையமாதேவியில் விளைநிலங்களில் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வந்த நிலையில் இன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் என்எல்சி நிலக்கரி சுரங்கம் விரிவாக்க செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் என்எல்சி நிலக்கரி சுரங்கம் விரிவாக்க பணிகளை மத்திய, மாநில அரசுகள் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. இருப்பினும் அந்த கோரிக்கை கண்டுக்கொள்ளப்படவில்லை. இதற்கிடையே தான் என்எல்சி நிலக்கரி சுரங்கம் விரிவாக்கம் பணிகள் தொடங்கின. அதன்படி வளையமாதேவியில் விளைநிலங்களில் ஜேசிபி, பொக்லைன் இயந்திரங்கள் இறங்கி நிலத்தில் கால்வாய் அமைக்கும் பணியை தொடங்கின. இன்னும் இரண்டு மாதத்திற்குள் அறுவடை செய்ய இருக்கும் நெற்பயிர்கள் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அழிக்கப்பட்டு வருகிறது.இதற்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் போலீஸ் பாதுகாப்புடன் இந்த பணிகள் நடந்து வந்தது.

இதனைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதாவது என்எல்சியை தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்றக்கோரி நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் இன்று போராட்டம் நடத்த உள்ளனர். மேலும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் என்எல்சியை முற்றுகையிடும் போராட்டமும் நடைபெற உள்ளது. இதற்கிடையே தான் இன்று வளையமாதேவியில் என்எல்சிக்காக கால்வாய் தோண்டும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பாமக போராட்டம் அறிவித்துள்ள நிலையில் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே தான் கால்வாய் தோண்டும் பணி இன்று கைவிடப்பட்டுள்ளது. பாமக போராட்டத்துக்கு போலீசார் செல்ல உள்ளதால் கால்வாய் தோண்டும் பணிக்கு பாதுகாப்புக்கு போதிய போலீசார் இல்லை என சொல்லப்படுகிறது. இதனால் தான் இந்த பணி இன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையே பாமக போராட்ட அறிவிப்பால் கடலூர் மாவட்டத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.