தமிழ்நாட்டின் ஒவ்வொரு தொகுதியிலும் பிரதமரின் செய்தியை அண்ணாமலை கொண்டு செல்ல போகிறார் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
தமிழ்நாடு பாஜக சார்பில் ‘என் மண் என் மக்கள் யாத்திரை’ நேற்று மாலை துவங்கியது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 168 நாட்கள் யாத்திரை மேற்கொள்ள உள்ளார். ராமேஸ்வரம் முதல் சென்னை வரை அண்ணாமலை பாதயாத்திரை செல்கிறார். பாஜகவை தமிழ்நாட்டில் வலிமைப்படுத்தும் நோக்கில் அண்ணாமலை இந்த பாத யாத்திரையை மேற்கொள்கிறார். இந்த நடைபயணத்தை தொடங்கி வைப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமேஸ்வரம் வந்தார். தொடர்ந்து அமித்ஷா பேசியதாவது:-
உலகின் பழமையான மொழியான தமிழில் பேச முடியாதற்கு உங்களிடம் முதலில் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இன்று என் மண், என் மக்கள் யாத்திரையை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்கி இருக்கிறார். இந்த ராமேஸ்வர பூமியானது இந்து மதத்தின் சின்னமாக இருக்கிறது. இந்த புண்ணிய தலத்தில் இருக்கும் மக்களுக்கு எனது இரு கரம் கூப்பி வணக்கம் தெரிவிக்கிறேன். ராமநாதசுவாமியின் அருள் ஆசியால், அண்ணாமலை தமிழகம் முழுவதும் நடைபயணம் செய்ய இருக்கிறார். இந்த பாதயாத்திரை, வெறும் அரசியல் சார்ந்தது மட்டுமல்ல. உலகின் பழமையான தமிழ் மொழியை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் யாத்திரை இதுவாகும். தமிழகத்தின் கலசாரத்தை, பண்பாட்டினை காஷ்மீர் வரை எடுத்து செல்லும் யாத்திரை. தமிழர்கள் மட்டுமின்றி, நாட்டில் உள்ள 130 கோடி மக்களின் மனதிலும் மரியாதையை ஏற்படுத்தும் யாத்திரை..
இந்த நடைப்பயணம், தமிழகத்தின் குடும்ப ஆட்சியை ஒழிப்பதற்கானது. ஊழல் பிடியில் சிக்கி இருக்கும் தமிழக மக்களை இந்த நடைப்பயணம் விடுவிக்கும் யாத்திரை.. இந்த யாத்திரை, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர் படுத்தும். ஊழலை ஒழித்து ஏழை மக்களின் வாழ்வாராத்தை பேணிக்காக்கும். தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிக்கும் இந்த நடை பயணம் மூலம் அண்ணாமலை செல்கிறார். இந்த தொகுதிகள் முழுவதும் அவர் பிரதமர் மோடியின் செய்தியையும், அவரின் நலத்திட்டங்களையும் – சாதனைகளை மக்களுக்கு கொண்டு செல்வார். தமிழகத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் செயல்படுத்திய ஏழை நலத்திட்டங்களை மீண்டும் கொண்டு வர இந்த நடைப்பயணம் உதவும்.
பிரதமர் மோடி தமிழ் மொழியின் பழமையையும், சிறப்பையும் உலகின் பல மேடைகளில் முழங்கி வருகிறார். ஐக்கிய நாடுகள் அவையில் கூட தமிழின் பெருமையை பேசிய ஒரே தலைவர் மோடி மட்டும் தான். ஜி-20 மாநாட்டின் முத்திரை வாசகம் கூட யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்பது தான். திருக்குறள் தந்த வள்ளுவருக்கு சிலை நிறுவப்படும் என்று அறிவித்தவர் பிரதமர் மோடி. மகாகவி பாரதியாரின் பிறந்த நாளான டிசம்பர்-21-ம் தேதியை இந்திய தேசிய மொழிகள் தினம் என அறிவித்தவர் மோடி. இலங்கையில் தமிழர்களின் நலனுக்காக ரூ.120 கோடி செலவில் கலாச்சார மையத்தை திறந்து வைத்தவர் மோடி. காசி-தமிழ் சங்கமம், சவுராஸ்டிரா சங்கமம் மூலம் தமிழை இந்தியாவின் வடக்கிலும், மேற்கிலும் பரப்பி வருகிறார். பப்புவா நியூ கினியா நாட்டிற்கு சென்ற மோடி, அந்த நாட்டின் மொழியில் திருக்குறளை வெளியிட்டார். தமிழின் வீர அடையாளமான செங்கோல், புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டு உள்ளது. நாட்டில் மிகுந்த அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி.
நலத்திட்டங்களுக்கு பெயரை மாற்றி உங்கள் பெயரை வைத்து கொள்வதால் எதுவும் நடந்துவிடப் போவதில்லை. திமுகவும், காங்கிரஸ் கட்சியும் பொதுமக்களை சந்தித்தால் காமன்வெல்த் ஊழல், 2ஜி ஊழல், நிலக்கரி ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், நீர்மூழ்கி கப்பல் ஊழல், இஸ்ரோ ஊழல் உள்ளிட்டவை தான் மக்களின் நினைவில் தோன்றும்.
இலங்கையில் கொத்து கொத்தாக தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டது காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான். தமிழக மீனவர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு திமுகவும், காங்கிரஸ் கட்சியும் தான் பொறுப்பு. நன்றாக நினைவில் வைத்து கொள்ளுங்கள். திமுக மிகப்பெரிய ஊழல் கட்சி. அவர்களது அமைச்சர் ஒருவர் ஊழல் குற்றச்சாட்டின் காரணமாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சிறையில் இருந்த போதிலும் இன்னும் அமைச்சராக தொடர்கிறார். அவரை ராஜினாமா செய்யுமாறு ஸ்டாலின் கேட்கவே இல்லை. அதற்கு காரணம் ஸ்டாலினை பற்றிய ரகசியங்களை அந்த அமைச்சர் வெளியிட்டு விடக் கூடாது என்பதற்காக தான். இவ்வாறு அமித் ஷா கூறினார்.