விவசாயத்திற்கும் விளை நிலங்களுக்கும் மதிப்பளிக்காமல் இதே நிலை தொடர்ந்தால் வருங்காலத்தில் “தங்க தட்டு இருக்கும், ஆனால் உண்பதற்கு உணவு இருக்காது” என்பதை மத்திய, மாநில அரசுகள் உணர வேண்டும் என்று சரத்குமார் கூறியுள்ளார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கற்றாழை, கரி வெட்டி மேல் வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாய விளைநிலங்களை நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் 2-வது சுரங்கப்பணிக்காக கையகப்படுத்துவது அங்கு வாழும் விவசாய மக்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதியாகும். இரண்டு மாதங்களில் அறுவடைக்கு தயாராக செழித்து வளர்ந்த பல நூறு ஏக்கர் பரப்பளவிலான குறுவைப் பயிர்களை இராட்சத எந்திரங்களைக் கொண்டு மனிதாபிமானம் இன்றி அழித்திருப்பது விவசாயிகளுக்கு தீராத மனவேதனை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே அரிசி தட்டுப்பாட்டால், ஜூலை 20 ந்தேதி முதல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி அல்லாத அரிசிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டது. உலகளவில் 140 நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யும் இந்தியாவின் இந்த அறிவிப்பால் சர்வதேச அளவில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. இப்போது விளைநிலங்களை நிறுவனங்களின் விரிவாக்கத்திற்காக அழித்தால், உள்நாட்டிலும் அரிசி தட்டுப்பாடு வராது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது.
விளைநிலங்களுக்கும் விவசாயத்திற்கும் மதிப்பளிக்காமல் இந்நிலை தொடர்ந்தால் வருங்காலத்தில் “தங்கத்தட்டிருக்கும், உண்ண உணவு இருக்காது” என்பதை மத்திய, மாநில அரசுகள் உணர வேண்டும். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் ஏற்கனவே என்.எல்.சி நிறுவனம் விவசாய நிலம் கையகப்படுத்தியதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் இயற்றியது. இருப்பினும், விளைந்த நிலங்களை அழித்து விவசாயிகளை வேதனைக்குள்ளாக்கிய என்.எல்.சி உடனடியாக 2 ம் கட்ட விரிவாக்கப்பணிகளை தடை செய்யவும், விரிவாக்கப்பணிக்கான அனுமதியை ரத்து செய்யவும் கடலூர் மாவட்ட நிர்வாகத்திடமும், தமிழக அரசிடமும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.