பாரத் மாதா விழித்துவிட்டாள்.. தமிழ் தாய் விழிக்கவில்லை. அவரை விழிக்க வைக்கும் பயணமே இது. தமிழ்தாயை மீட்டு எடுக்கும் பயணம் இது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக சார்பில் ‘என் மண் என் மக்கள் யாத்திரை’ நேற்று மாலை துவங்கியது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 168 நாட்கள் யாத்திரை மேற்கொள்ள உள்ளார். ராமேஸ்வரம் முதல் சென்னை வரை பாதயாத்திரை செல்கிறார் அண்ணாமலை. மிக நீண்ட அரசியல் யாத்திரையாக இது இருக்க போகிறது. பாரத் ஜோடோ யாத்திரை காங்கிரஸ் கட்சியை வலிமைபடுத்தியது போல இந்த யாத்திரை பாஜகவை தமிழ்நாட்டில் வலிமைப்படுத்தும் என்று அண்ணாமலை நம்பிக்கை கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் பாஜகவை வலிமைப்படுத்தும் விதமாக அவர் இந்த யாத்திரையை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். இதற்காக நேற்று ராமேஸ்வரத்தில் விழா நடந்தது. இதில் பாஜகவின் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு உள்ளார்.
இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை அகற்றுவதே நம்முடைய பணி. 2024ல் மீண்டும் மோடி ஆட்சிக்கு வருவார்: 400 எம்பிக்கள் வெல்வார்கள். தமிழ்நாடு, புதுச்சேரியில் இருந்து 40 எம்பிக்கள் பாஜக சார்பாக வெல்வார்கள்.
என்னுடைய யாத்திரை ஒரு வேள்வியாக, தவமாக இருக்க போகிறது. இதற்கு வந்த கூட்டணி கட்சி தலைவர்கள் எல்லோருக்கும் என்னுடைய நன்றிகள். வருகின்ற காலத்தில் நாம் நிறைய பேசுவோம். இந்த நடைப்பயணத்தில் நிறைய விஷயங்களை நாம் பேசுவோம். எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சார்பாக கூட்டத்தில் கலந்து கொண்ட எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர் பி உதயகுமாருக்கு நன்றிகள்.
நம்முடைய பாஜகவின் வளர்ச்சியை உறுதி செய்யும், நமது வெற்றியை உறுதி செய்யும் நடைபயணமாக இந்த பயணம் இருக்க போகிறது. பாஜக மக்களுக்கான கட்சி. பாரத மாத உறக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் என்று விவேகானந்தர் கூறி இருந்தார். 2014ல் மோடி ஆட்சிக்கு வந்த பின் உறக்கத்தில் இருந்து பாரத் மாதா எழுந்தார். உலக நாடுகளும் கூட இதை ஒப்புக்கொள்கிறேன். இந்தியாவின் வளர்ச்சியை உலக நாடுகள் பார்க்கின்றன. கோடிக்கணக்கான மக்களுக்கு சொந்த வீடு,கேஸ் சிலிண்டர், தண்ணீர் வசதியை கொடுத்தவர் மோடி. அவர் ஒரு சாமானியர். அவர் நடத்தும் ஆட்சி சாமானியர் ஆட்சி. 9 ஆண்டுகளில் இந்தியாவை பெருமையின் உச்சிக்கு கொண்டு சென்றவர் பிரதமர் மோடி.
பாரத் மாதா விழித்துவிட்டாள்.. தமிழ் தாய் விழிக்கவில்லை. அவரை விழிக்க வைக்கும் பயணமே இது. தமிழ்தாயை மீட்டு எடுக்கும் பயணம் இது. ஊழலில் திளைத்து உள்ள திமுகவை வீழ்த்தும் பயணம் இது. அதை உணர்ந்தே கூட்டணி கட்சிகள் இங்கே வந்துள்ளன. இது ஒரு நீண்ட நெடிய வேள்வி இது. இந்த யாத்திரை ஒரு தவம் போல நடக்க போகிறது. பாஜக தொண்டர்களின் யாத்திரை இது. தேசிய தலைவர்களின் ஆசியுடன் நடக்கும் யாத்திரைக்கு. நாம் மக்களிடம் செல்ல வேண்டும். நான் பட்டி தொட்டி எல்லாம் செல்ல போகிறேன். மக்களிடம் பேச போகிறேன்.
பிரதமர் மோடி இதயபூர்வமாக தமிழராக தன்னை காட்டிக்கொண்டு உள்ளார். தமிழர்களின் புகழை இந்த அளவிற்கு எந்த பிரதமரும் தூக்கி பிடித்ததே கிடையாது. ஐநா முதல் உலகம் வரை திருக்குறளை கொண்டு சென்றவர் பிரதமர் மோடி. அதை மறுக்க முடியாது. இவ்வாறு பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.