மணிப்பூரில் நிவாரண முகாம்களை பார்வையிட்டனர் ‘இண்டியா’ எம்.பி.க்கள் குழுவினர்.
மணிப்பூர் நிலவரம் தொடர்பாக ஆய்வு செய்ய அம்மாநிலம் சென்றுள்ள ‘இண்டியா’ கூட்டணியின் எதிர்க்கட்சி எம்பிக்கள் குழு, பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களை பார்வையிட்டனர். அதன் தொடர்ச்சியாக, மணிப்பூர் ஆளுநரை சந்திக்க உள்ளதாக அக்குழுவில் இடம்பெற்றுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
இம்பாலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாங்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து நிலைமையை ஆய்வு செய்ய உள்ளோம். பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களுக்கு நாங்கள் செல்ல உள்ளோம். அங்கு அவர்கள் எவ்வாறு இருக்கிறார்கள் என்பதை நேரில் பார்ப்போம். அதனைத் தொடர்ந்து மணிப்பூர் மாநில ஆளுநர் அனுசுயா உய்கி-யை சந்திக்க உள்ளோம்” எனத் தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக, மணிப்பூரில் சுராசந்பூர் மாவட்டத்தில் நிவாரண முகாமுக்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கனிமொழி, மனோஜ் ஜா உள்ளிட்ட எம்பிக்கள் சென்று அங்கு அறையில் தங்கி இருந்த மக்களை நேரில் சந்தித்தனர். அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தனர். மேலும், மணிப்பூரில் விரைவில் அமைதி திரும்ப தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட அரசை வலியுறுத்துவோம் என்றும் அவர்கள் கூறினர்.
எதிர்க்கட்சி எம்பிக்கள் குழு மணிப்பூர் வந்துள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அம்மாநில முன்னாள் முதல்வர் ஒக்ராம் இபோபி சிங், “சுமார் 26 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இங்கு வந்திருக்கிறார்கள். அவர்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மணிப்பூரில் தற்போது நிலைமை எவ்வாறு இருக்கிறது என்பதை எம்பிக்கள் குழு கணிக்கும். இங்குள்ள நிலைமையை மத்திய அரசுக்கு நிச்சயம் அவர்கள் தெரிவிப்பார்கள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். மணிப்பூர் முதல்வரின் ராஜினாமாவை மீண்டும் வலியுறுத்துவீர்களா என கேட்கிறீர்கள். நிச்சயம் வலியுறுத்துவோம். ஏனெனில், அவர் இந்த பிரச்சினையைக் கையாண்ட விதம் மிகவும் தவறானது. அவரது திறமைக் குறைபாடே இதற்குக் காரணம். இதன் காரணமாகவே பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்தது” என குற்றம் சாட்டினார்.
இதனிடையே, எதிர்க்கட்சி எம்பிக்களின் மணிப்பூர் பயணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், “மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா ஆகியோர் இது குறித்து அவர்களுக்கு தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் இந்த விவகாரத்தை அரசியலாக்க முயல்கிறார்கள். அது தவறு” என தெரிவித்துள்ளார்.