பிளாஸ்டிக் பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருவது மிக அவசியம்: பிரதமர் மோடி!

‘பிளாஸ்டிக் பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வர வேண்டியது மிக அவசியம்’ என ‘ஜி 20’ நாடுகளின் சுற்றுச்சூழல் மந்திரிகள் பங்கேற்ற மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி கூறினார்.

‘ஜி 20’ சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாடு சென்னையில் கடந்த 26-ந் தேதி தொடங்கியது. ஏற்கனவே பெங்களூரு, குஜராத், மும்பை ஆகிய இடங்களில் இந்த மாநாடு நடைபெற்ற நிலையில் இறுதி மாநாடாக சென்னையில் இது நடந்தது. சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் ‘ஜி 20’ நாடுகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இறுதி முடிவு எடுப்பதற்காக இந்த மாநாட்டில் ‘ஜி 20’ நாடுகளின் சுற்றுச்சூழல் துறை மந்திரிகள் பங்கேற்றனர். இதுதவிர சிறப்பு அழைப்பின் பேரில் 14 நாடுகளைச் சேர்ந்த மந்திரிகள், சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள், நிபுணர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் மத்திய சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மந்திரி பூபேந்தர் யாதவ் பங்கேற்றார்.

இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி காணொலி வாயிலாக பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு நதிகள் தண்ணீரை எடுத்து சென்றாலும் அவை தண்ணீரை குடிப்பதில்லை. மரங்கள், அதன்மூலம் கிடைக்கும் பழங்களை சாப்பிடுவதில்லை. மேகங்கள் மழை பொழிவுக்கு காரணமாக இருந்தாலும் மேகங்களால் கிடைத்த தண்ணீரால் உற்பத்தி செய்யப்படும் தானியங்களை மேகங்கள் உட்கொள்வதில்லை. இப்படி, இயற்கை நமக்காக அனைத்தையும் வழங்கி கொண்டிருக்கிறது. அப்படி இருக்கும் போது இயற்கைக்கும் நாம் ஏதாவது செய்தாக வேண்டும். பூமித்தாயை பாதுகாப்பதும் பராமரிப்பதும் நமது அடிப்படை பொறுப்பு. இந்த பொறுப்புணர்வு சமீபகாலமாக பலரால் புறக்கணிக்கப்படுவதால் பருவநிலையை பாதுகாக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். சமூகத்தில் கடைசி நபரின் வளர்ச்சியை உறுதி செய்வது நமது கடமையாக இருக்க வேண்டும். பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளால் வளரும் நாடுகள் பாதிக்கப்படுகின்றன. புதைபடிவ எரிபொருள் அல்லாத மூலங்களில் இருந்து பெற வேண்டிய மின் திறனை பொறுத்தமட்டில் 2030-ம் ஆண்டு நாம் அடைய வேண்டிய இலக்கை 9 ஆண்டுகளுக்கு முன்னதாக அடைந்து விட்டோம்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனில் உலகின் முதல் 5 நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. 2070-ம் ஆண்டுக்குள் மாசு இல்லாத நிலையை அடைய இலக்கு நிர்ணயித்துள்ளோம். இந்தியாவின் முன்முயற்சிகள் அனைத்தும் மக்களின் பங்களிப்பால் செயல்படுத்தப்படுகின்றன. ‘அம்ரித் சரோவர்’ என்ற நீர் பாதுகாப்பு இயக்கத்தின் மூலம் ஓராண்டில் 63 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீர்நிலைகளை மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த இயக்கம் முற்றிலும் சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடல் சார்ந்த பொருளாதாரத்தை மேம்படுத்த ‘ஜி 20’ நாடுகளின் பங்களிப்பு உதவியாக இருக்கும்.

பிளாஸ்டிக் பயன்பாட்டையும், அதன்மூலம் ஏற்படும் மாசுபாட்டையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டியது அவசியம் ஆகும். இதற்காக ‘ஜி 20’ நாடுகள் ஆக்கப்பூர்வ பணியில் ஈடுபட வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் கூட்டு நடவடிக்கை மிக உதவியாக இருக்கும். இந்தியாவில் தனிநபர்கள், நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மரம் நடுதல், நீர் பாதுகாப்பு போன்ற நடவடிக்கைகளுக்கு தனிநபர்கள், உள்ளாட்சி அமைப்புகள், நிறுவனங்கள் மூலம் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இயற்கை அன்னைக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமைகளை ஒருபோதும் நாம் மறந்துவிடக் கூடாது. இயற்கை அன்னை பிளவுபட்ட அணுகுமுறையை விரும்புவது இல்லை. எனவே, இந்த மாநாடு இயற்கையை பாதுகாக்கும் வகையில் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள துணையாக இருக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் பேசினார்.

வெளிநாட்டு மந்திரிகளிடம் மாமல்லபுரத்தின் சிறப்பை எடுத்துக்கூறிய பிரதமர் ‘ஜி 20’ நாடுகள் உள்ளிட்ட 34 நாடுகளின் மந்திரிகள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் பிரதமர் மோடி தனது உரையை தொடங்குவதற்கு முன்பாக இரு கைகளை கூப்பி அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார். தொடர்ந்து, இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றான சென்னைக்கு வந்ததற்காக அனைவரையும் மனமுவந்து வரவேற்பதாக அவர் குறிப்பிட்டார். சென்னை நகரம் கலாசாரம் மற்றும் வரலாற்று சிறப்பு நிறைந்தது என்றும், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமான மாமல்லபுரம் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம் என்றும் கூறிய பிரதமர், ‘மாமல்லபுரத்தின் மனம் கவரும் சிற்பங்களையும், அதன் மகத்தான அழகையும் கண்டு ரசியுங்கள்’ என்றார்.