பச்சோந்தியை போல மாறிக்கொண்டே இருப்பவர் அண்ணாமலை: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

பச்சோந்தியை போல மாறிக்கொண்டே இருப்பவர் அண்ணாமலை என்று ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. கூறினார்.

ஈரோடு பி.பி.அக்ரஹாரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் நேற்று நடந்த இலவச மருத்துவ முகாமை முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரையை தொடங்கி இருக்கிறார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதைபோல இது ஒரு பாவ யாத்திரை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் மணிப்பூரிலே கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். பாலியல் வன்முறைகளால் அங்கு பல பெண்கள் பாதிக்கப்பட்டனர். நாட்டின் பிரதமராக இருக்கும் நரேந்திரமோடி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறாமல் உள்ளார். எனவே நரேந்திரமோடியின் தலைமையிலான இந்த ஆட்சி தூக்கி ஏறியப்பட வேண்டும்.

ஜெயலலிதா ஆட்சி நன்றாக இருந்தது என்று இப்போது அண்ணாமலை சொல்கிறார். ஆனால், ஒரு மாதத்துக்கு முன்பாக ஜெயலலிதா ஊழல் பேர்வழி என்று சொன்னவரும் இதே அண்ணாமலை தான். அண்ணாமலைக்கு நிரந்தரமான கருத்து கிடையாது. பச்சோந்தியை போல தினந்தோறும் மாறிக்கொண்டே இருக்கக்கூடிய மனிதர் தான் அண்ணாமலை. என்.எல்.சி. நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நேரத்தில் இன்னும் ஒரு மாதங்கள் காத்திருக்கலாம். அதை விட்டு பொக்லைன் எந்திரங்களை விட்டு விவசாய பயிர்களை நாசப்படுத்துவது நல்லதாக தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.