அமெரிக்காவின் வெடிமருந்து கிடங்காக தைவான் மாற்றப்பட்டுள்ளதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.
சீனாவில் நடந்த உள்நாட்டு போரால் கடந்த 1949-ம் ஆண்டு தைவான் தனி நாடாக பிரிந்தது. ஆனால் தைவானை தங்களது நாட்டுடன் இணைக்க சீனா தீவிர முனைப்பு காட்டுகிறது. அதன் ஒருபகுதியாக தைவான் எல்லையில் அடிக்கடி போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் தைவானுடன் வேறு எந்த நாடுகளும் அதிகாரப்பூர்வ உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என சீனா எச்சரித்துள்ளது. ஆனால் அமெரிக்கா மட்டும் துவக்கம் முதலே தைவானுக்கு ஆதரவாக குரல்கொடுத்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவ உதவிகளை தைவானுக்கு அமெரிக்கா வழங்கி உள்ளது. இதன்மூலம் தைவானை தனது வெடிமருந்து கிடங்காக அமெரிக்கா மாற்றி விட்டதாக சீனா குற்றம்சாட்டியது. மேலும் அமெரிக்காவின் இந்த ராணுவ உதவிகள் தைவானை ஒன்றிணைக்கும் தனது விருப்பத்தை எந்தவிதத்திலும் தடுக்காது என சீனா அரசாங்கம் தெரிவித்துள்ளது.