மணிப்பூரில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் உலக அரங்கில் இந்தியாவுக்கு ஏற்பட்ட தலைகுனிவு என சீமான் கூறினார்.
மணிப்பூரில் நடைபெறும் வன்முறை சம்பவங்களை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அமுதா நம்பி, சீதாலட்சுமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-
மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் ஆடையின்றி சாலையில் அடித்து இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அங்குள்ள குகி பழங்குடியின மக்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் கட்டவிழ்க்கப்பட்டு வருகின்றன. இது உலக அரங்கில் இந்தியாவுக்கு ஏற்பட்ட தலைகுனிவு ஆகும். இது உடனடியாக முடிவுக்கு வரவேண்டும். மலைப்பகுதிகளில் உள்ள வளக் கொள்ளைக்காகவே இந்த போராட்டம் நடக்கிறது. மத்திய அரசும், அங்குள்ள மாநில அரசும் அலட்சிய போக்கோடு நடந்து கொள்கின்றன. உடம்பில் எங்கு காயம் ஏற்பட்டாலும் கண் அழுவது போல, உலகில் எங்கு பாதிப்பு என்றாலும் தமிழர் மண் அழும். அந்த அடிப்படையில்தான் மணிப்பூர் மக்களுக்காக குரல் கொடுக்கிறோம்.
நெய்வேலியில் நிலக்கரி தோண்டி எடுப்பதற்காக 2-வது சுரங்கத்தை விரிவாக்கம் செய்ய என்.எல்.சி. நிறுவனம் முடிவு செய்து, விளைநிலங்களை அழித்துவருகிறது. விவசாய நிலத்தை அழித்து மின்சாரம் தயாரித்து அதை விவசாயிகளுக்கு வழங்குவதில் என்ன நியாயம் இருக்கப் போகிறது? எனவே இந்த திட்டத்தை அரசு கைவிட்டு, விளைநிலங்களை மீண்டும் விவசாயிகளுக்கே வழங்கவேண்டும். வேல் யாத்திரையால் சட்டமன்றத்தில் பா.ஜ.க.வுக்கு இடம் கிடைக்கவில்லை. அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததால்தான் அந்த 4 இடங்களும் பா.ஜ.க.வுக்கு கிடைத்தன. பாதயாத்திரை என்பதை ஏதாவது கோவிலுக்கு வேண்டி சென்றால் புண்ணியமாவது கிடைக்கும். அண்ணாமலையின் யாத்திரையால் என்ன நடக்க போகிறது? ராகுல் காந்தியும்தான் யாத்திரை போனார். என்ன நடந்தது, ஒன்றும் நடக்கவில்லையே? அது போலத்தான் இதுவும். இவ்வாறு அவர் கூறினார்.