டெல்லி யூனியன் பிரதேசத்தில் அதிகாரிகள் நியமனம், மாறுதல்கள் தொடர்பான அதிகாரங்களை வழங்கும் அவசர சட்டத்துக்கு மாற்றான மசோதாவை லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தாக்கல் செய்தார். இம்மசோதாவுக்கு தொடக்க நிலையிலேயே காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
டெல்லி யூனியன் பிரதேசத்தில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு செயல்பட்டு வருகிறது. டெல்லி நாட்டின் தலைநகரம் என்பதால் யூனியன் பிரதேச அரசுக்கும் (மாநில அரசு) மத்திய அரசுக்கும் இடையே அதிகாரங்கள் தொடர்பான மோதல் இருந்து வருகிறது. டெல்லி நிர்வாகத்தில் அதிகாரிகள் நியமனம், மாறுதல்கள் தொடர்பாக மத்திய அரசுக்கும் டெல்லி அரசுக்கும் இடையேயான மோதல் உச்சநீதிமன்றத்துக்கும் போனது. டெல்லி விவகாரத்தை விசாரித்த உச்சநீதிமன்றம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்குதான் அதிகாரிகள் நியமனம், மாறுதல் தொடர்பான அதிகாரம் இருக்கிறது என அதிரடியான தீர்ப்பை கொடுத்தது. இத்தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. அத்துடன் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செல்லாததாக்கும் வகையில் ஒரு அவசர சட்டம் கொண்டு வந்தது. அதன்படி டெல்லி நிர்வாகத்தில் அதிகாரிகள் நியமனம், மாறுதல்கள் செய்ய மத்திய அரசுக்குதான் அதிகாரம் உண்டு. இந்த அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவும் ஒப்புதல் அளித்ததால் தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது.
ஒரு அவசர சட்டம் கொண்டுவரப்பட்டால் அதற்கு மாற்றாக நாடாளுமன்ற இரு சபைகளிலும் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றி சட்டமாக்க வேண்டும் என்பது மரபு. ஆகையால் டெல்லி சேவைகள் தொடர்பான அவசர சட்டத்துக்கு மாற்றாக மத்திய அரசு மசோதாவை நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய முடிவு செய்திருந்தது. லோக்சபாவில் இம்மசோதாவை இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இந்த மசோதாவை தாக்கல் செய்த மத்திய அமைச்சர் அமித்ஷா, டெல்லி நிர்வாகம் தொடர்பான மசோதாக்களை நிறைவேற்ற இந்த சபைக்கு அரசியல் சாசனம் அதிகாரம் வழங்கி உள்ளது. டெல்லி நிர்வாகம் தொடர்பாக நாடாளுமன்றம் எந்த சட்டமும் கொண்டுவரலாம் எனவும் நீதிமன்றமும் அனுமதித்துள்ளது. இம்மசோதாவுக்கு எதிரானவை அனைத்தும் அரசியல் ரீதியானவை. அனைவரும் இம்மசோதாவை கொண்டுவர அனுமதிக்க வேண்டும் என்றார்.
இம்மசோதாவை தொடக்க நிலையிலேயே காங்கிரஸ் கடுமையாக எதிர்த்தது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி லோக்சபாவில் பேசுகையில், நாட்டின் கூட்டாட்சி முறையை குழிதோண்டி புதைக்கக் கூடியது இந்த மசோதா. ஒரு மாநிலத்தின் இறைமையை மூர்க்கமாக அத்துமீறக் கூடியது இந்த மசோதா. இதனை கடுமையாக எதிர்க்கிறோம் என்றார். டெல்லி மசோதாவை காங்கிரஸ் எதிர்த்தாக வேண்டும் என்பதை எதிர்க்கட்சிகளின் “இந்தியா ” கூட்டணியில் சேருவதற்கு முன் நிபந்தனையாக வைத்தவர் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால். ஏற்கனவே டெல்லி மசோதாவை எதிர்ப்பதாக அறிவித்த காங்கிரஸ், லோக்சபாவிலும் தற்போது எதிர்த்திருக்கிறது.