தர்மயுத்தம் நடத்தியவர் தற்போது டிடிவி காலில் சென்று விழுந்துள்ளார்: ஜெயக்குமார்!

சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று கூறி தர்மயுத்தம் நடத்தியவர் தற்போது டிடிவி காலில் சென்று விழுந்துள்ளார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியுள்ளார்.

கொடநாடு கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க கோரி ஓபிஎஸ்-டிடிவி ஆகியோர் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அதிமுக தொண்டர்களால் நிராகரிக்கப்பட்ட ஓபிஎஸ் அவர்களால் மாயமான் என்றும் 420 என்றும் செல்லமாக அழைக்கப்பட்ட டிடிவி உடன் கைகோர்த்துக் கொண்டு ஈபிஎஸ் அரசை கவிழ்க சதி செய்தனர். சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று கூறி தர்மயுத்தம் நடத்தியவர் தற்போது டிடிவி காலில் சென்று விழுந்துள்ளார்.

நாடகத்தை நடத்துவதற்காக கொடநாடு விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர். கொடநாடு குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தது அதிமுக அரசு; கொரோனாவுக்கு பிறகு வழக்கு நடந்து தீர்ப்பு வர வேண்டிய நிலையில் திமுக அரசு மேற்கு மண்டல ஐஜி விசாரணைக்கும் சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிட்டது. ஐஜி தலைமையில் விசாரணை நடந்த வழக்கு ஏஎஸ்பி தலைமைக்கு மாற்றப்பட்டதன் மர்மம் என்ன? இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்காக திமுகவை சேர்ந்தவர்கள் ஜாமீன்தாரர்களாக இருந்துள்ளனர். இந்த வழக்கு நேர்மையாக விசாரிக்க வேண்டும் என்பதற்காக தான் இதை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஈபிஎஸ் கேட்டார்.

இதனால்தான் கீழ்த்தரமுள்ள ஓபிஎஸை கட்சியில் இருந்து நீக்கினோம். விடியா திமுக அரசின் ‘பி’ டீமாக ஓபிஎஸ் உள்ளார். அம்மா தங்கிய கொடநாடு பங்களா அம்மாவுக்கு சொந்தமானது இல்லை. அது யாருக்கு சொந்தம் என்பது ஓபிஎஸ்க்கு தெரியும். கொடநாடு பங்களாவை ஆட்டைய போட ஓபிஎஸும் டிடிவியும் திட்டமிடுகிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக கொடியையும், சின்னத்தையும் சட்டவிரோதமாக பயன்படுத்தி உள்ளார்கள்; அவர்கள் மீது சட்ட நடவடிக்கையை எடுப்போம். இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.