தன்னை டெல்டாகாரன் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சீமான், மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டது அந்த டெல்டாகாரன் தானே என விமர்சித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் தன்னை டெல்டாகாரன் என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், அதை கடுமையாக விமர்சித்துள்ளார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் இதுகுறித்து நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
சொல்லிக்க வேண்டியதுதான் நானும் டெல்டாகாரன்னு. மீத்தேனுக்கு கையெழுத்து போட்டது எந்த டெல்டாகாரன்? இதே டெல்டாகாரன் தானே. மீத்தேன் எடுக்குற இடத்துல என் விளைநிலம் பாதிக்கப்படுதா இல்லையா? என் குடிநீர் நஞ்சாகுதா இல்லையா? காற்று நஞ்சாகுதா இல்லையா? அதை கூட விடுங்க.. காவிரியில் மேகதாது அணை கட்டினால் இங்குள்ள டெல்டா மாவட்டங்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்படும் என்பது டெல்டாகாரருக்கு தெரியாதா? அப்புறம் எதுக்கு மேகதாது அணை கட்டுவோம்னு தேர்தல் வாக்குறுதி கொடுத்த காங்கிரஸுக்கு ஆதரவா கர்நாடகாவில் பிரச்சாரம் செய்ய போனீங்க. இப்போது கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமார், மேகதாது அணை கட்டியே தீருவோம்னு சொல்றாரு. இப்போ இந்த டெல்டாகாரரு என்ன செய்யப் போறாரு? டெல்டாகாரர் செய்யுற வேலையா இது? இவ்வாறு சீமான் பேசினார்.