தனிப்பட்ட முறையில் செந்தில் பாலாஜியை விசாரிப்பது மிக மிக அவசியமான ஒன்று என அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான துஷார் மேத்தா தெரிவித்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது சட்டவிரோதமானது என அவரது மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையில் செந்தில் பாலாஜியை கைது செய்ததில் எந்த சட்டவிரோதமும் இல்லை என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இதையடுத்து செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனு மீது ஏற்கெனவே கடந்த மாதம் இறுதியில் இரு முறை விசாரணை நடத்தப்பட்டது. அதில் செந்தில் பாலாஜி தரப்பில் கபில் சிபல் ஆஜராகி வாதம் செய்தார். இந்த நிலையில் நேற்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் முகுல் ரோத்தகி ஆஜராகினார்.
இந்த நிலையில் இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் இன்றே முடிக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் போபண்ணா, சுந்தரேஷ் ஆகியோர் உத்தரவிட்டனர். செந்தில் பாலாஜி தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்றைய தினம் அமலாக்கத் துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது வாதத்தை தொடங்கினார். அப்போது அவர் அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும். மருத்துவமனை, நீதிமன்ற காவலில் உள்ளதை விசாரணை காலமாக கருதக் கூடாது. ஊழல், பொதுமக்கள் பணத்தை கையாடல் செய்தல் உள்ளிட்ட புகார்கள் செந்தில் பாலாஜி மீது உள்ளன. தனிப்பட்ட முறையில் செந்தில் பாலாஜியை விசாரிப்பது மிக மிக அவசியம். வாக்குமூலங்களை பெற முயற்சித்தபோது அவர் எந்த ஒத்துழைப்பையும் தரவில்லை. விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்காததால்தான் அவரை கைது செய்தோம். சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான விவகாரத்தில் செந்தில் பாலாஜி ஈடுபட்டிருப்பார் என்பதற்கான வலுவான காரணங்கள் உள்ளன. நீதிமன்றக் காவலில் இருக்கும் போது ஒருவரை ஒப்படைக்க ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்ய முடியாது. பல்வேறு ஊழல் புகார்கள் அவர் மீது உள்ளன. வழக்கில் தொடர்ந்து விசாரணை நடத்தவிடாமல் அனைத்து வகையிலும் செந்தில் பாலாஜி தடுத்தார். இவ்வாறு துஷார் மேத்தா வாதம் செய்துள்ளார்.