பாஜக தலைவர் அண்ணாமலை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்று அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 2024 லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரம் அதிகாரபூர்வமற்ற முறையில் தொடங்கிவிட்டது என்றுதான் கூற வேண்டும். சமீபத்தில் தமிழ்நாட்டிற்கு வந்த பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கிட்டத்தட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜக பிரச்சாரத்தை தொடங்கி வைத்துவிட்டார் என்றுதான் கூறப்பட்டது. முக்கியமான கொங்கு மாவட்டங்களில் பாஜக வெல்வது தொடர்பாக முக்கியமான சில ஆலோசனைகளையும் ஜேபி நட்டா பாஜக நிர்வாகிகளுடன் மேற்கொண்டதாக கூறப்பட்டது. அந்த ஆலோசனையில், கொங்கு மண்டலத்தில் உள்ள எம்பி தொகுதிகள் அனைத்தையும் நாம் கைப்பற்ற வேண்டும். கொங்கு மண்டலத்தில் இருந்து 5 எம்பிகளாவது வெற்றிபெற வேண்டும். முக்கியமாக கோவை, நீலகிரியில் வென்றே ஆக வேண்டும். குறைந்தது 1 மத்திய அமைச்சராவது கொங்கு மண்டலத்தில் இருந்து வர வேண்டும் என்பதை உறுதி செய்யுங்கள். கூட்டணியில் இடம் கிடைக்குமா என்றெல்லாம் நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதை மேலிடம் பார்த்துக்கொள்ளும். கூட்டணி பற்றி நாங்கள் முடிவு எடுத்துக்கொள்வோம். நீங்கள் தேர்தல் மீது கவனம் செலுத்துங்கள் என்று நட்டா கூட்டத்தில் பேசியதாக கூறப்பட்டது.
முக்கியமாக கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடுவார், நீலகிரி பாஜக இணை அமைச்சர் எல் முருகன் போட்டியிடுவார் என்று செய்திகள் வந்தன. மேடையில் பேசும் போதும் கோவை, நீலகிரியில் நாம் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்று நட்டா கூறினார். அதற்கு முன்பாக பேசிய அண்ணாமலை கோவையில் பாஜக எம்எல்ஏ நன்றாக செயல்பட்டு வருகிறார். அதேபோல் நீலகிரியில் இணை அமைச்சர் எல் முருகன் நீலகிரியில் கவனம் செலுத்தி வருகிறார் என்றும் கூறினார். இதன் மூலம் கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடுவார், நீலகிரி பாஜக இணை அமைச்சர் எல் முருகன் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில்தான் திடீர் திருப்பமாக பாஜக தலைவர் அண்ணாமலை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்று அறிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்தும் விதமாக அதன் தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டு உள்ளார். ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை வரை இவர் நடைபயணம் மேற்கொண்டு உள்ளார். அண்ணாமலை நடைபயணம் தொடர்பாக பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. இன்று இந்த நடைப்பயணத்திற்கு இடையே சிவகங்கையில் பேசிய அண்ணாமலை, தமிழ்நாட்டில் இருக்கவே நான் விரும்புகிறேன். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர வேண்டும். அதற்குத்தான் பாஜகவில் இணைந்தேன். கட்சியின் தொண்டனாக தலைமை சொல்வதை கேட்பேன். அவர்கள் சொல்வதை கேட்டு அவர்களின் வெற்றிக்கு பாடுபடுவேன். டெல்லி போவதில், அங்கே பதவி பெறுவதில் எனக்கு விருப்பம் இல்லை. அதனால் லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டேன். தமிழ்நாட்டில்தான் நான் அரசியல் செய்வேன், என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.