மணிப்பூர் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்!

மணிப்பூர் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தலையிட வேண்டும் என்று ’இண்டியா’ கூட்டணி எம்.பி.க்கள் இன்று அவரை நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.

எதிர்க்கட்சிகளின் சார்பாக குடியரசுத் தலைவரைச் சந்திக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேரம் கேட்டிருந்தார். அதன்படி, ‘இண்டியா’ கூட்டணி சார்பில் 21 எம்.பி.க்கள் குழு இன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நேரில் சந்தித்தனர். அப்போது மணிப்பூர் வன்முறை குறித்து குடியரசுத் தலைவரிடம் மல்லிகார்ஜுன கார்கேவும், காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும் விளக்கிக் கூறினர். தொடர்ந்து மணிப்பூர் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இச்சந்திப்பின் போது ஜனாதிபதியிடம் தரப்பட்ட கோரிக்கை மனுவில், மணிப்பூர் விவகாரத்தில் ஜனாதிபதி உடனே எவ்வித தாமதமும் இல்லாமல் தலையிட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் தங்களது கடமையை செய்ய வலியுறுத்த வேண்டும். பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் இது குறித்து பேசுவதற்கு ஜனாதிபதி அழுத்தம் தர வேண்டும். மேலும் மைத்தேயி, குக்கி என மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்கள் 2 பேரை ராஜ்யசபா எம்.பி.க்களாக நியமனம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பு குறித்து காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:-

எதிர்க்கட்சிகளின் சார்பில் மணிப்பூர் சென்று வந்த 21 எம்.பி.க்கள் உட்பட, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 31 எம்.பி.க்கள் இன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவைச் சந்தித்தோம். அவரிடம் கோரிக்கை மனு ஒன்றினை அளித்தோம். அப்போது, மணிப்பூர் நிலவரம் குறித்து, குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்முறை, மறுவாழ்வு மற்றும் பிற நிலவரங்கள் குறித்து நாங்கள் விளக்கினோம். இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு பிரதமர் மோடி நேரில் சென்று மாநிலத்தில் அமைதி ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே எங்களுடைய மிக முக்கியமான கோரிக்கை. ஹரியானாவில் தற்போது நடைபெற்று வரும் வன்முறைகள் தொடர்பாகவும் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். இவ்வாறு அவர் கூறினார்.