அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை அரசியல் விஞ்ஞானி என்று மறைமுகமாக விமர்சித்த அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார்.
தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி இடையே அவ்வப்போது லேசாக உரசல் நீடித்துக் கொண்டேதான் இருக்கிறது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை என்று அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கூறுவதும் இதற்கு பாஜகவின் சில நிர்வாகிகள் மறுக்கும் வகையில் பேசுவதும் என அதிமுக – பாஜக கூட்டணிக்குள் சலசலப்புகள் ஓய்ந்தபாடில்லை. டெல்லியில் உள்ள தலைமையுடன் அதிமுக இணக்கமாகவே இருந்தாலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கும் இடையே அவ்வப்போது வார்த்தை போர் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அண்மையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சாடியிருந்தார். செல்லூர் ராஜூ கூறுகையில், “அண்ணாமலைக்கும் எங்களுக்கும் என்னங்க இருக்கு.. அண்ணாமலை மாநில தலைவர் அவ்வளவு தான்.. “ஜஸ்ட் லைக்” மற்றதை பற்றி எங்களுக்கு ஒன்னும் இல்லை. எங்களுக்கு மோடி ஜி, அமித்ஷா ஜி, நட்டா ஜி தான் முக்கியம். கூட்டணி கட்சியினர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை அழைத்து பக்கத்தில் அமர வைத்தார் மோடி. மோடிக்கு தெரிந்த எடப்பாடி பழனிசாமியின் அருமை இங்கே இருப்பவருக்கு தெரியவில்லை என்றால் நாங்கள் என்ன செய்வது? என்று கூறியிருந்தார்.
இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த அண்ணாமலை, யார் பேசினால் யாருக்கு பதில் சொல்லனும் என்பதற்கு தரம் இருக்கிறது. சில பேர் அரசியல் விஞ்ஞானியாக தன்னை நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லி என்னுடைய தரத்தை நான் தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை. எங்களுக்கு எந்த ஒரு லீடரின் அப்ரூவலும் தேவையில்லை. மக்களுடைய அப்ரூவல் வேண்டும். மக்களுடைய ஆதரவு வேண்டும்.. மக்களுடைய அன்பு வேண்டும் எனக் காட்டமாக விமர்சித்தார்.
இந்த நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செல்லூராஜூ – அண்ணாமலை இடையேயான கருத்து மோதல் பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். குறிப்பாக செல்லூர் ராஜூ பற்றிய கேள்விக்கு அரசியல் விஞ்ஞானிக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என்று அண்ணாமலை சொல்லியிருக்கிறாரே என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு, சிரித்துக் கொண்டே பதிலளித்த ஜெயக்குமார், “செல்லூர் ராஜூ இப்போ வருவார்.. நீங்கள் அவரிடமே கேளுங்கள் என்றார்” தொடர்ந்து தமிழக பாஜக தலைமை அதிமுகவை விமர்சித்து வருவதாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு ஜெயக்குமார் பதிலளித்து கூறியதாவது:-
பொதுவாகவே ஒரு அடிமட்ட தொண்டனை விமர்சனம் செய்தால் கூட எங்களுடைய கடுமையான ஆட்சேபனை, கடுமையான கண்டனத்தை தெரிவிக்க நாங்கள் தவறியது இல்லை. அண்ணாமலைக்கே தெரியும்.. அதிமுகவை தொட்டால் கெட்டான் என்று.. அந்த நிலை அண்ணாமலைக்கு தெரியும் என்பதால் எதுவாக இருந்தாலும் சரி.. நான் ஏற்கனவே சொன்னது போல இதுபோன்ற விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அண்ணாமலையின் பொறுப்பு.. அடிமட்ட தொண்டனாக இருந்தாலும் சரி.. செல்லூர் ராஜூவாக இருந்தாலும் சரி.. யாராக இருந்தாலும் நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம். எங்கள் கட்சியினரை விமர்சனம் செய்தால் எதிர்விமர்சனங்களை சந்திக்க வேண்டிய ஒரு நிலை கண்டிப்பாக ஏற்படும். அந்த ஒரு நிலைமையை அண்ணாமலை கண்டிப்பாக ஏற்படுத்த மாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கையை காப்பாற்றினால் அண்ணாமலைக்கு நல்லது” என்றார்.