மேகதாதுவில் அணை கட்டுவதற்கு நில அளவீடு பணிகள் துவங்கிவிட்டதாக செய்திகள் வருகிறது. தமிழகத்தில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதால் மேகதாது அணைக்கட்டும் விவகாரத்தில் மெத்தன போக்கை கடைபிடிக்க கூடாது என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மேகதாதுவில் அணை கட்டுவதற்கு நில அளவீடு பணிகள் துவங்கிவிட்டதாக செய்திகள் வருகிறது. அணைக் கட்டப்பட்டால் தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்கள் பாலைவனம் ஆகிவிடும் அபாயம் உள்ளது. இதை உணர்ந்து தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும். கர்நாடக அரசு தொடர்ந்து பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையில் தங்கள் நிலையில் இருந்து பின்வாங்காமல் தொடர்ந்து மேகதாதுவில் அணைக்கட்டும் பணியில் ஈடுபடுகிறது.
தமிழகத்தில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதால் மேகதாது அணைக்கட்டும் விவகாரத்தில் மெத்தன போக்கை கடைபிடிக்க கூடாது. காவிரி நீர் என்பது தமிழக விவசாயிகளின் உயிர்நீர். இவற்றில் அரசியலை புகுத்தக்கூடாது. தமிழக அரசு மேகதாதுவில் அணைக்கட்டும் பிரச்சினையில் உரிய ஆலோசனை செய்து, விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.